Published : 27 Jul 2022 10:49 AM
Last Updated : 27 Jul 2022 10:49 AM

மாணவர்கள் காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "பெரும்பாலான மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கூறுகின்றனர். எனவே மாணவர்கள் காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவே கூடாது. காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே காலை உணவை தவறவிடக்கூடாது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரில், பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியது: "நான் நீண்டநேரம் உங்களுடன் உரையாட முடியாத சூழலில் இருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியும். அண்மையிலே, கரோனா என்ற தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு, கடந்த இரண்டு மூன்று நாட்களாக, சில நிகழ்ச்சிகளில் அதுவும் குறிப்பாக சென்னையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நான் சென்றுகொண்டிருக்கிறேன். தொண்டை பாதிக்கப்பட்டாலும், தொண்டில் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன்.

குழந்தைகளின் புன்சிரிப்பு தரும் புத்துணர்ச்சியும், பிள்ளைச் செல்வங்கள் பேச்சு தரக்கூடிய உற்சாகமும் மருந்து மாத்திரையை விட வலிமையானவை. கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எனக்கு உடல் சோர்வு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், உங்களை எல்லாம் பார்க்கும்போது அவையெல்லாம் பறந்து போய்விடுகிறது.முழு நலன் பெற்றதாக நான் உணருகிறேன்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக குறிப்பாக மாணவ செல்வங்கள் அனைவரும் காலையிலேயே கிளம்பி வந்துள்ளீர்கள். அவ்வாறு வந்திருக்கும் மாணவர்களை பார்த்து நான் கேட்கும் ஒரே கேள்வி காலை உணவு சாப்பிட்டீர்களா? என்றுதான். இந்த மேடைக்கு நான் வருவதற்குமுன் ஒரு வகுப்பறைக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினேன்.

ஐந்தாறு மாணவிகளிடம் நான் ஒரு சில கேள்விகளைக் கேட்டேன். நீங்கள் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்?, எப்படி பள்ளிக்கு வருகிறீர்கள்?, காலை உணவு சாப்பிட்டீர்களா? என்று கேட்டேன். ஐந்து பேரில் மூன்றுபேர் காலையில் சாப்பிடமால் வந்ததாக என்னிடம் தெரிவித்தனர். இதுதான் உண்மமை, இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.

நான் படிக்கும் காலத்திலும்கூட பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பலமுறை சாப்பிடாமல் சென்றிருக்கிறேன். நகர்ப்பகுதிகள் பரவாயில்லை, கிராமப்புற பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது இதன்மூலம் தெரிந்துவிட்டது. இந்த கேள்வியை நான் எதற்காக கேட்டேன் என்றால், பெரும்பாலான மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று கூறுகின்றனர்.

எனவே மாணவர்கள் காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவே கூடாது. காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பகலில் குறைவாகவும், இரவில் அதைவிட இன்னும் குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்றுதான், மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

ஆனால், இன்றைக்கு காலையில் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிகமாகவும் சாப்பிடுகிற ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர். அதுபோல இருக்கக்கூடாது. எனவே கட்டாயமாக உறுதியாக, காலை உணவை யாரும் தவறவிடக்கூடாது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் நேற்றுதான் நான் கையொப்பமிட்டு வந்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x