Published : 27 Jul 2022 04:21 AM
Last Updated : 27 Jul 2022 04:21 AM
திருவனந்தபுரத்தின் மிக அமைதியான புறநகர் பகுதி. ஒரு குறுகலான தெருவில் அமைந்துள்ள வெள்ளை வீட்டின் பெயர் பலகையில் ‘நம்பி நாராயணன்’ என்ற பெயர். சாதனைகளுக்காக மட்டுமின்றி, சோதனைகளுக்காகவும் தேசத்தின் உதடுகளில் உரக்க உச்சரிக்கப்படும் பெயர் இது. வெளியே மழை தூவும் ஒரு மாலை நேரத்தில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் சில மணி நேரம் உரையாடினேன். அதில் இருந்து சில துளிகள் இங்கே..
திருவனந்தபுரம் அடுத்த தும்பாவின் மேரி மகதலேனா தேவாலயத்தில், இஸ்ரோ தனது ஆய்வுப் பணியை தொடங்கிய காலத்தில், அப்துல் கலாமுடன் எளிமையான ஆராய்ச்சி கட்டமைப்பில் உங்கள் ஆராய்ச்சியை தொடங்கியவர் நீங்கள். அந்த அனுபவம் பற்றி...
கலாமுடன் ஒரே அலுவலக அறையில், இளம் விஞ்ஞானியாக எனது ஆராய்ச்சி பணியை ஆரம்பித்தேன். எனது மூத்த விஞ்ஞானியான கலாம், திட எரிபொருள் (SolidPropellant) ராக்கெட் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். நான் திரவ எரிபொருள் (Liquid Propellant) ராக்கெட் ஆராய்ச்சியை தொடங்கியிருந்தேன். சிலநேரம், நள்ளிரவை தாண்டியும் ஆராய்ச்சி தொடரும். அப்போது களைப்பில் படுக்கை விரிப்பை கடற்கரை மணற்பரப்பில் விரித்து தூங்கியிருக்கிறோம்.
எந்த அறிவியல் தத்துவத்தையும் நடைமுறையில் பரிசோதித்த பிறகே நம்பிக்கை பெற்று தொடர்ந்து முன்னெடுப்பவர் கலாம். அவரும் நீங்களும் இணைந்து செய்த துப்பாக்கி வெடிபொருள் சோதனை ஆபத்தில் முடிந்ததே. அதுபற்றி...
70-களில் பிரடரிக் ஏபில் - ஆர்பிரெட் நோபல் (நோபல் பரிசை ஏற்படுத்தியவர்) இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதில் ‘வளிமண்டல காற்றழுத்தத்தைவிட மூன்றில் ஒரு மடங்கு குறைந்த அழுத்தத்தில் வெடிமருந்து தீப்பிடிக்காது’ என்ற தகவல் இருந்தது. இதை சோதித்துப் பார்க்க விரும்பினேன்.
கண்ணாடிக் குடுவையில் வெடிமருந்தை வைத்து, பம்ப் மூலம் காற்றை உறிஞ்சி காற்றழுத்தத்தை குறைத்து, வெடிமருந்தை பற்றவைத்தேன். வெடிபொருள் தீப்பற்றவில்லை. 9 முறை திரும்பத் திரும்ப செய்தும், கடைசிவரை தீப்பற்றவில்லை. ஏபில் - நோபல் கூற்றுசரிதான் என்பதை கலாமிடம் கூறினேன். அவர் நம்பவில்லை. ‘உசுப்பினால் வெடிபொருள் வெடிக்கும். பரிசோதனையை நேரில் பார்க்கவேண்டும்’ என்றார். அவருக்காக மறுபடியும் சோதனையை செய்தேன்.
கண்ணாடிக் குடுவையில் முகத்தை பதித்தபடி, வெடிபொருள் தீப்பற்றுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார் கலாம். அப்போதுதான், குடுவையை பம்புடன் இணைக்கும் வால்வு மூடியிருப்பதை கவனித்தேன். வால்வு மூடியிருந்தால் குடுவையில் இருந்து காற்றை பம்ப் உறிஞ்ச முடியாது. எனவே குடுவைக்குள் வளிமண்டல காற்றழுத்தமே இருப்பதால், வெடிபொருள் தீப்பற்றி சற்று நேரத்தில் வெடித்துவிடுமே.. அய்யோ.. கலாம் கண்ணாடிக் குடுவையில் கன்னத்தை வைத்திருக்கிறாரே.. சடுதியில் கலாமை கீழேதள்ளிவிட்டு அவருடன் உருண்டேன்.அடுத்த கணம்.. பயங்கர சத்தத்துடன் வெடிபொருள் வெடித்து சிதறியது. இருவரும் தப்பினோம். உடையை உதறியபடியே எழுந்த கலாம், ‘‘பார்த்தாயா, வெடித்து விட்டது. வெடிபொருள் வெடிக்கும் என்பதே உண்மை’’ என்றார் சிரித்துக்கொண்டே. வால்வு மூடியிருந்தது என்று விளக்கியபிறகு, அதை மீண்டும் சோதித்த பிறகே கலாம் நம்பினார்.
விண்வெளி ஆராய்ச்சிகளை தாண்டி, கலாம் - உங்கள் குடும்பம் இடையிலான நல்லுறவு தொடர்ந்தது பற்றி...
என் குடும்பத்தாருடன் மிக அன்பாக பழகுவார் கலாம். ஒருமுறை குடும்பத்தோடு பிரான்ஸ் சென்றிருந்தேன். சிறுவனான என் மகனை தனியாக இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய சூழல். அப்போது, பிரான்ஸில் இருந்து இந்தியா திரும்பும் திட்டத்தில் இருந்த கலாம், தன்னோடு என் மகனை விமானத்தில் மும்பை வழியாக திருவனந்தபுரம் அழைத்து வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு தொலைபேசியில் எனக்கு தகவல் சொன்னார்.
நாட்டுக்கான தங்களது முக்கிய பங்களிப்பு விக்ரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai-VIKAS) பெயரை கொண்ட விகாஸ் - திரவ எரிபொருள் இன்ஜின். 80-களில் உருவாக்கப்பட்ட விகாஸ் இன்ஜின் இன்றுவரை இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவூர்திகளின் (ராக்கெட்) முக்கிய சேவகனாக உழைத்து வருகிறது. இதன் ஆரம்பகட்ட ஆராய்ச்சி எப்படி இருந்தது?
இந்தியா - பிரான்ஸ் தொழில்நுட்பக் கூட்டு முயற்சியில் உருவானது விகாஸ் இன்ஜின். அதில் இருந்த ஒரு முக்கிய பொறியியல் சிக்கல் அதன் சமநிலையின்மை (Instability). நானும் இந்திய விஞ்ஞானிகளும் அதை சரிசெய்தோம். இதனால் பிரான்ஸ் விஞ்ஞானிகள் அவர்களது வடிவமைப்பு ஆய்வுக்குழுவில் என்னை உறுப்பினராக்கினர். பிரான்ஸின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டாலும், தரத்தில் பிரான்ஸ் இன்ஜினைவிட இந்தியாவின் விகாஸ் இன்ஜின் மேம்பட்டிருந்தது. இந்தியர்கள், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சர்வதேச அரங்கில் நிறுவியது மிகுந்த மனநிறைவை தந்தது.
விகாஸ் இன்ஜினை மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் ஆராய்ச்சியில் நீங்கள் இறங்கிய வேளையில், இடியாய் இறங்கியது விண்வெளி ரகசியத்தை வெளிநாட்டுக்கு கசிய விட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கும், கைதும். ஏறக்குறைய 30 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த, மத்திய அரசின் கூடுதல் செயலர் அந்தஸ்தில் இருந்த மூத்த விஞ்ஞானியான நீங்கள் பல சித்ரவதைகளை அனுபவித்தீர்கள். அத்தகைய சோதனை காலத்திலும் எது உங்களை நம்பிக்கையோடு நடைபோட வைத்தது?
இந்த வழக்கின் மூலம் மிக முக்கிய விண்வெளி ஆய்வில் தொய்வு ஏற்பட்டது நிஜம். ஒரு தனிமனிதனுக்கு ஏற்பட்டதைவிட, இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகம். நான் குற்றமற்றவன் என்பது எனக்கு தெரியும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோல பிற விஞ்ஞானிகளுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடாது. இந்த காரணங்களால்தான் நம்பிக்கையோடு தொடர்ந்து போராடினேன். எனது சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. தேசமே என் பின்னால் நிற்பதை உணர்கிறேன்.
சோதனையான அந்த காலகட்டத்தில் கலாமின் துணை எப்படி இருந்தது?
கலாமுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். இந்த வழக்கை அவர் நன்கு அறிந்திருந்தார். நீதி வெல்லும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
கலாம் குடியரசுத் தலைவரான பிறகு, அவரை சந்தித்தது உண்டா?
பல முறை சந்தித்திருக்கிறேன். குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே சந்தித்திருக்கிறேன். ஒரு சந்திப்பில், ‘ஒரு அதிர்ஷ்டசாலி ஒரு துரதிர்ஷ்டசாலியை சந்திக்கிறார்’ என்று பலமான அர்த்தத்துடன் குறிப்பிட்டார். அவர் திருவனந்தபுரம் வரும்போது ராஜ்பவனில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை ராஜ்பவனில் அவரை சந்திக்க ஒரு மணி நேரத்துக்கு மேல்காத்திருந்தும் அழைப்பு வரவில்லை. பொறுமை இழந்த நான், அங்கிருந்த ஊழியரிடம் கூறிவிட்டு புறப்பட ஆயத்தமானேன். உள்ளே சென்ற ஊழியர் திரும்பிவந்து, என்னை சற்று நேரம் காத்திருக்கச் சொன்னார். பிறகு கலாம் என்னை உள்ளே அழைத்தார். ‘‘மற்ற பார்வையாளர்களை விரைவாக சந்தித்துவிட்டு, உங்களை கடைசியாக அழைத்து நிறைய நேரம் செலவிட விரும்பினேன். அதனால்தான் தாமதப்படுத்தினேன்’’ என்றார். நான் நெகிழ்ந்துபோனேன்.
கலாமிடம் பிடித்த குணங்கள் என்ன?
அவர் ஒரு கனவுக்காரர். எதிர்காலங்களைப் பற்றி பிரம்மாண்ட கனவுகள் அவரிடம் நிறைய இருந்தன. எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்தாமல் அறிவியல் திட்டங்களை முன்னிலைப்படுத்தி விஞ்ஞானிகளை வழிநடத்தினார். உள்நாட்டு தொழில்நுட்பங்கள் வளர வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கினார். விண்வெளி, ராணுவ ஆராய்ச்சி ஆகிய துறைகளில் தேசத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பை நிர்மாணிப்பதில் அவரது பங்கு அளவிட முடியாதது.
இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கூறினார் நம்பி நாராயணன். உரையாடல் முடிந்து சிலிர்ப்புடன் விடைபெற்றேன். தூறும் மழையில் வாசல் தாண்டி வாகனம் வரை வந்து வழியனுப்பிய அவரது எளிமையும், தாழ்மையும் எனது மனதில் தொடர்ந்து தூறிக்கொண்டு இருக்கின்றன.
இன்று ஜூலை 27 - மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம்
மிக பொருத்தமான முதல் மரியாதை!
விஞ்ஞானி நம்பி நாராயணனின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி மத்திய அரசு 2019-ல் பத்ம பூஷன் விருது வழங்கியது. தொடர்ந்து சில ஆண்டுகள் பத்ம விருதுகள் தேர்வுக் குழுவிலும் பங்காற்றினார். இவரது வாழ்க்கையை (வழக்கை) மையமாக கொண்டு சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’. கடந்த மாதம் கான் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டபோது, நம்பி நாராயணன் பங்கேற்றார். படத்தின் நிறைவில் பார்வையாளர்கள் எழுந்து நின்று தொடர்ந்து கரகோஷம் செய்தது அவரது வியர்வைக்கும், கண்ணீருக்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம் எனலாம். ஒரு தமிழர் இப்படி கொண்டாடப்படுவது மிகவும் பெருமைக்குரியது. அதிலும் விகாஸ் இன்ஜின் உருவாக்கத்தில் அவருடன் களமாடிய பிரான்ஸ் தேசத்தில் அவரது வாழ்க்கை திரைப்படத்துக்கு கிடைத்த முதல் மரியாதை மிக பொருத்தமானதே! அறிவியல் சிறக்கும்! வாய்மையே வெல்லும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT