Published : 30 Sep 2016 09:41 AM
Last Updated : 30 Sep 2016 09:41 AM
மயிலம்மாவை நீங்கள் அறிவீர்களா? ‘எரவாளர்' பழங்குடியினப் பெண்மணி. கேரளத்தின் பிலாச்சிமடா கிராமத்தில் வசித்தார். 2000-களின் தொடக்கத்தில் ஒருநாள் அவரது கிணற்றுத் தண்ணீர் கருமையாக மாறியது. ஒரு கட்டத்தில் பயன்படுத்த முடியாத அளவுக்கு ரசாயன தன்மை அடைந்தது. மயிலம்மாவின் கிணறு மட்டுமல்ல; பிலாச்சிமடாவின் பெருமாட்டி பஞ்சாயத்து, பட்டனமசேரி பஞ்சாயத்து, ராஜிவ் நகர், மாதவன் நாயர் காலனி, தொடிச்சிப்பதி காலனி ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டது. மீன்காரா, கம்பலத்தாரா, வெங்கலக்காயம் நீர்த் தேக்கங்கள், சித்தூர்புழா ஆறு ஆகியவையும் பாதிக்கப்பட்டன.
பிலாச்சிமடாவில் கோகோ கோலா குளிர்பான தொழிற்சாலை செயல்பட்டது. அது 1998-99ல் அங்கு 40 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. அந்நிறுவனம் 65 ராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ் சியது. சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவு நீர் நிலத்தடியிலும் நீர்நிலைகளிலும் வெளியேற் றப்பட்டது. நிலத்தடி நீரைக் குடித்த மக்க ளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்தன.
குளிர்பான நிறுவனத்தின் முன்பாக தனிநப ராக சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கி னார் மயிலம்மா. தினமும் காவல்துறையினர் வந்து குண்டுக்கட்டாக தூக்கிப்போய்விடு வார்கள். ஆனாலும் மறுநாள் போராட்டம் தொடரும். ஆரம்பத்தில் கேலியும் கிண்டலும் இருந்தாலும் ஒரிருவராக ஆதரவு பெருகியது. பலர் அவருடன் இணைந்தார்கள். ‘கோகோ - கோலா விருத சமர சமிதி’ என்கிற அமைப்பை உருவாக்கினார் அவர். சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களான ‘வினை யோடு’ வேணுகோபால், சி.கே.ஜானு உள்ளிட் டோர் உதவினர். போராட்டம் மாநில அளவில் விரிவடைய தமிழகத்தில் இருந்தும் ஆதரவு கரங்கள் நீண்டன.
2002 ஜூன் மாதம் பெரும் போராட்டம் வெடித்தது. ஏராளமானவர்கள் கைது செய்யப் பட்டார்கள். ஆனாலும் தீர்வு கிடைக்க வில்லை. அப்போதுதான் ஆலையை அகற்றும் அதிகாரம் கிராம சபைக்கு உண்டு என்கிற உண்மை மயிலம்மாவுக்கு தெரிந்தது. பெரு மாட்டி கிராமப் பஞ்சாயத்தில் ஆலையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற கோரினார் மயிலம்மா. மக்கள் பிரதிநிதிகளை விலை பேசியது ஆலை நிர்வாகம் மக்கள் உறுதி யாக நின்று தீர்மானங்களை நிறைவேற்றி னார்கள். அப்போதும் அவற்றை மதிக்க வில்லை மாவட்ட நிர்வாகம். விவகாரம் நீதிமன்றம் சென்றது. கிராம சபை அதிகாரத்தை செயல்படுத் தாததைக் கண்டித்த நீதிமன்றம் குளிர்பான நிறுவனத்தை மூட உத்தரவிட்டது. இறுதியாக 2004-ம் ஆண்டு இறுதியில் அந்த குளிர்பான ஆலை இழுத்து மூடப்பட்டது.
மயிலம்மாவை மத்திய அரசின் ‘ சக்தி புரஸ்கார்’ விருது, ‘அவுட் லுக்’ பத்திரிகை யின் ‘ஸ்பீக் அவுட்’ விருது போன்றவை அலங்கரித்தன. 2007, ஜன. 6-ல் மயிலம்மா மறைந்தார். இன்றும் கேரளத்தில் இயற் கையை சுரண்டுவதற்கு எதிரான போராட் டத்தின் குறியீடாக போற்றப்படுகிறார் மயிலம்மா!
குத்தம்பாக்கம் கிராமத்தை அறிவீர்களா? அது ஒரு கிராமம் மட்டுமல்ல. இந்திய கிராமங்களின் பெருமை அது. காந்தியின் கனவு அது. உயிர்ப்போடு இருக்கும் உள்ளாட்சிகளுக்கான சமகால சாட்சியம் அது. அடித்தட்டு மக்களும் அதிகாரத்தை சுவைத்த சாமானியச சாதனை அது. ஐ.நா. சபை தொடங்கி அண்ணா ஹசாரே வரை அசர வைத்த மக்கள் ஜனநாயகம் அது. அதன் வரலாற்றை பின்பு பார்ப்போம். அந்தக் கிராமத்துக்கு வந்த சோதனையையும் அதை கிராம சபை மூலம் மக்கள் முறியடித்த சாதனையையும் இப்போது பார்ப்போம்.
2009, ஜூன் மாதம். பரந்துவிரிந்த புல்தரையில் புள்ளினங்கள் மேய்ந்துக்கொண்டிருந்தன. திடீரென வாகனங்களில் அதிகாரிகள் வருகிறார்கள். மேய்ச்சல் நிலம் அளக்கப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பும் பணி தொடங்கியது. தகவல் அறிந்த மக்கள் உள்ளே குதித்து அதிகாரிகளைத் தடுக்கிறார்கள். அந்த இடமே களேபரமானது. பஞ்சாயத்து தலைவி உட்பட பலர் கைது செய்யப்பட்டார்கள். வளர்ச்சித் திட்டத்தை கிராம மக்கள் தடுத்ததாக குற்றம்சாட்டியது அரசு. அந்த வளர்ச்சித் திட்டம் என்ன என்று தெரியுமா? அம்பத்தூர், மதுரவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி, வளசரவாக்கம் ஆகிய ஐந்து நகராட்சிகளின் குப்பைகளை அங்கு கொட்டுவதுதான் அந்த வளர்ச்சித் திட்டமாம்.
குத்தம்பாக்கம் எப்படிப்பட்ட பூமி என்று தெரியுமா?செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி அது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு சிறு ஏரிகளின் நீர்வழிப் பாதைகள் இந்த கிராமத்தின் வழியாகதான் செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைகின்றன. அந்த நீர் வழிப்பாதைகளை காலம் காலமாக மக்கள் காத்து வருகின்றார்கள். அதனாலேயே செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது. அதனாலேயே செம்பரம்பாக்கத்திலிருந்து சென்னைக்கு வருகிறது. அதனாலேயே சென்னையின் தாகம் தணிகிறது.
அங்கே குப்பைகளை கொட்டுவதற்கு அரசு தேர்வு செய்திருந்த சுமார் 100 ஏக்கரும் நிலம் வளமான பூமிதான். வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்த அந்த மேய்ச்சல் நிலத்தை பஞ்சாயத்து தனது பயன்பாட்டுக்கு மாற்றியிருந்தது. அங்கே தீவனப்புல் பயிரிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்தன. அப்போதுதான் இந்தப் பிரச்சினை. திட்டத்தை ரத்து செய்யக்கோரி கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர் போராட்டங்கள் நடந்தன. நந்தகுமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஆனாலும் பணிகளை நிறுத்தவில்லை அரசு.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுப் பிரிவு என்று போராடினார்கள் மக்கள். திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு வித்திட்ட அல்மித்ரா பாட்டேலை தனது கிராமத்துக்கு அழைத்து வந்தார் பஞ்சாயத்து தலைவி கீதா. நிலத்தடி நீரை ஆய்வு செய்தவர், குத்தம்பாக்கத்தில் குப்பையைக் கொட்டக் கூடாது என்று அறிக்கை விடுத்தார். கிராமப் பஞ்சாயத்து சார்பில் சென்னை ஐ.ஐ.டி-யில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அறிவியல் பூர்வமான தரவுகள் அங்கு வைக்கப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையை பெற்றது கிராமப் பஞ்சாயத்து. அதில், ‘திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த குத்தம்பாக்கம் கிராமம் உகந்த இடம் கிடையாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் உதவியும் நாடப்பட்டது. அப்போது அதன் தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானியும் ஓர் ஆய்வறிக்கை அளித்தார். இவை எல்லாம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. நிரந்தரத் தடை விதித்தது நீதிமன்றம். வேறுவழியில்லாமல் 2011-ம் ஆண்டு பின்வாங்கியது மாநில அரசு.
பணம் புரளும் பன்னாட்டு நிறுவனமானாலும் சரி... அதிகாரம் புரளும் மாநில அரசானாலும் சரி... ஒரு கிராமப் பஞ்சாயத்து நினைத்தால் மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் என்பதற்கான உதாரணங்களாக திகழ்கின்றன பிலாச்சிமடாவும் குத்தம்பாக்கமும்!
(பயணிப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT