Published : 27 Jul 2022 04:05 AM
Last Updated : 27 Jul 2022 04:05 AM
மாணவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க மறுத்து பெற்றோரிடம் பத்திரம் எழுதி வாங்கியதாக தனியார் பள்ளி மீதான குற்றச்சாட்டு குறித்து கோவையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களின் பெற்றோரிடம், அந்த பள்ளி நிர்வாகம் இழப்பு எதிர்காப்பு பத்திரம் (Indemnity Bond)ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது. பெறுநர், பள்ளியின் முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பத்திரத்தில், பள்ளியின் பொறுப்பில் மாணவர் இருக்கும்போது நடைபெறும் உயிரிழப்பு, உடமைகள் சேதம் உள்ளிட்ட எந்தவித இழப்புக்கும் பள்ளி நிர்வாகம், அங்குபணிபுரியும் ஊழியர்களுக்கு எதிராக எந்தவித கோரிக்கையும் வைக்கமாட்டேன் என ஒப்புக்கொள்வதாகவும், அதற்கு பள்ளி சார்பிலோ, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சார்பிலோ எந்த இழப்பீடும் கிடைக்காது என ஒப்புக்கொள்வதா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரம் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று அவர் டிஇஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி கூறும்போது, “பத்திரம் தொடர்பாக பெற்றோரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை.
இது தொடர்பாக டிஇஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அவர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நேரத்தில், அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் முழுப் பொறுப்பாகும். அதை மறுப்பதோ, பெற்றோர் மீது பொறுப்பை தள்ளிவிடுவதோ நியாயம் கிடையாது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவை யான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ளும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT