Published : 26 Jul 2022 08:44 PM
Last Updated : 26 Jul 2022 08:44 PM

“கரூரில் விமான நிலையம்” - மத்திய அரசிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் கோரிக்கை

புதுடெல்லி: கரூரில் விமான நிலையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள இடம் குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் மத்திய அமைச்சரைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகள் தொடர்பாகவும், கரூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதன்பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பன்னூர் மற்றும் பரனூர் இந்த இரண்டு இடங்களில் மட்டும் விமான நிலையம் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான சைட் கிளியரன்ஸ் (Site Clearance) பெறுவது தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.

மத்திய அரசிடமிருந்து, அந்த அனுமதி கிடைத்தவுடன், தமிழக முதல்வர் அறிவுரையின்படி திட்ட அறிக்கை அளிக்கவுள்ளோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருக்கக்கூடிய விமான நிலையங்களுக்கான விரிவானப் பணிகள் குறித்தும் அமைச்சரிடம் விவாதித்தோம். இதில் நில எடுப்பு பணிகளின் நிலை, பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடங்கள் எவை, இந்த பணிகளில் உள்ள முன்னேற்றங்கள் என்பது குறித்தும் ஆலோசித்துள்ளோம்.

சென்னை விமான நிலையத்தை Maintenance and Repair Facility (MRO) , இந்த வசதியை ஏற்படுத்துவதற்கான இடம் தேவையாக இருக்கிறது. அதனையும் தமிழ்நாடு அரசுக்கு டிட்கோ நிறுவனத்தின் மூலம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதேபோல், தமிழக முதல்வர் கரூருக்கு சென்றபோது அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கரூர் ஒரு வளர்ந்துவரும் ஜவுளி நகரமாக இருந்துவரும் காரணத்தால் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி, கரூரில் புதிதாக ஒரு விமான நிலையம் அமைத்திட வேண்டும், மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும்விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x