Published : 26 Jul 2022 09:05 AM
Last Updated : 26 Jul 2022 09:05 AM
இயற்கையின் கொடையான நீலகிரி மாவட்டத்தை பாதுகாக்க கட்டிட விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சுர்ஜித் கே.சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு இயற்கை அளித்த கொடை நீலகிரி மாவட்டம். இங்குள்ள கோத்தகிரி பகுதியின் தட்ப, வெப்ப நிலை மற்றும் வாழ்க்கை நிலை, சுவிட்சர்லாந்து நாட்டை விட சிறந்தது என்று நம்பப்படுகிறது. இது, நாட்டிலுள்ள முழுமையான, பசுமையான மலைவாசஸ்தலமாகும். தற்போது, பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தொகை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு கட்டுமான விதிகள் மீறப்படுவதால், சுற்றுச்சூழல் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், வனவிலங்குகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்கவும், பழங்குடியினர் மற்றும் படுகர்கள் போன்ற பூர்வீக சமூகங்களைப் பாதுகாக்கவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதேசமயம், மலைவாசஸ்தல கட்டிட விதி மீறல்களை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.
இதுதொடர்பாக நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், கோத்தகிரி தாலுகாவில் 138 கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சட்டத்தை மீறுபவர்கள் பல்வேறு வழிகளை பின்பற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.
பூர்வீக மக்களின் வாழ்விடங்களான மந்து, கோக்கால், பாடிகள் மற்றும் நத்தம் நிலங்களில் வாழும் பூர்வீக படுகர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை நடைமுறைகள், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை, கட்டிட விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய வம்சாவளியினருக்கான அரசு குடியேற்றங்கள், ஏனைய விளிம்புநிலைச் சமூகங்களுக்கான அரசு குடியேற்றங்கள் உள்ளிட்டவை அரசு விதிகளில் குறிப்பிடப்பட வேண்டும். நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்க, கட்டிட வீதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT