Last Updated : 30 Sep, 2016 02:59 PM

 

Published : 30 Sep 2016 02:59 PM
Last Updated : 30 Sep 2016 02:59 PM

குடிநீருக்கு தேவைப்படும் என்பதால் மணிமுத்தாறு நீரை பாசனத்துக்கு வழங்க மறுப்பு: 10 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் கருகும் சோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப்பின் கார் பருவத்தில் கடும் வறட்சி தற்போது நீடிக்கிறது. இதனால் மாவட்டம் முழுக்க 10 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கிறார்கள். மழை பெய்யவில்லை என்பதால் மணிமுத்தாறு அணையிலிருந்தும் தண்ணீர் வழங்கவும் அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 19.80 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு நீர்மட்டம் 52.86 அடியாக இருந்தது. இதுபோல் மற்ற அணைகளின் நீர்மட்டம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. குளங்களும் நூற்றுக்கணக்கில் வறண்டுள்ளதால் இவ்வாண்டு கார் சாகுபடி பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கிறது.

நம்பிக்கை பொய்த்தது

மாவட்டத்தில் இவ்வாண்டு கார் பருவத்தில் 23 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு வேளாண்மைத்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 16,020 ஹெக்டேர் வரையில்தான் சாகுபடியை எட்டமுடிந்தது. தொடக்கத்தில் அணைகள் மற்றும் குளங்களில் இருந்த நீர் இருப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்ததால் இந்த அளவுக்கு நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆனால், தொடர்ச்சியாக மழை பெய்யாமல் வறண்ட வானிலை நீடித்தது விவசாயிகளுக்கு கவலை அளித்தது. நட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமல் அவர்கள் கண்ணீர் வடிக்கும் நிலை உருவாகிவிட்டது.

90 நாள் பயிர்

மாவட்டத்தில் தாமிரபரணி பாசனம் மற்றும் கன்னடியன்கால் பாசனம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மட்டுமே நட்ட பயிர்கள் அறுவடையை எட்டும் நிலை உள்ளது. 10 ஆயிரம் ஹெக்டேருக்குமேல் இவ்வாண்டு கார் பருவ நெற்பயிர்கள் கருகிவிடும் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் 90 நாள் பயிராக இருக்கும் நிலையில் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் வறட்சியை காரணம் காட்டி அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10 நாட்களாகவே நிறுத்தப்பட்டுவிட்டதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

கோரிக்கை நிராகரிப்பு

மணிமுத்தாறு பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நட்ட பயிர்களை காப்பாற்ற அந்த அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் மற்றும் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் மன்றாடினர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாடிய பயிர்களுடன் போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அவ்வாறு தண்ணீரை திறக்க சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.

குடிநீருக்கு தேவைப்படும்

மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீரை திறக்க விவசாயிகள் கேட்டபோது, அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டாலும், அது பெருங்கால் பாசனத்துக்குத்தான் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தற்போதைய வறட்சி நீடித்தால் வரும் அக்டோபர் 10-ம் தேதி வரையில்தான் குடிநீருக்கே தண்ணீரை திறந்துவிடும் அளவுக்கு, அணையின் நிலைமை இருப்பதையும், தற்போது அணைகளிலுள்ள நீர் இருப்பில் பாதியளவு சகதியே இருப்பதால் விவசாயத்துக்கு தண்ணீரை எதிர்பார்க்க முடியாது என்று, விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்துவிட்டார்கள்.

இதனால் விவசாயிகள் தங்கள் கோரிக்கையை அழுத்தமாக சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துப் போயுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்குமுன் மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் சந்தித்தபோது விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க இயலாத நிலையை எடுத்துக்கூறிய ஆட்சியர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி தெரிவித்திருக்கிறார்.

கணக்கெடுப்பு தாமதம்

தண்ணீரின்றி பயிர்கள் கருகியுள்ளது குறித்த கணக்கெடுப்பை உடனே எடுத்து 30-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கடந்த 26-தேதி சுற்றறிக்கையையும் ஆட்சியர் அனுப்பியிருக்கிறார். ஆனால் மாவட்டத்தில் இதுவரை நெற்பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை அதிகாரிகள் எடுக்கவில்லை என்று விவசாய பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்புக்கு தயாராக இருக்கும் நிலையில் வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கணக்கெடுப்புக்கு வரவில்லை. உள்ளாட்சி தேர்தல் பணியை காரணம் காட்டி அவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட விவசாய சங்க செயலாளர் வேலுமயில் கூறும்போது, ``அணைகளில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு விவசாயத்துக்கு தண்ணீர் தரமுடியாத நிலையை அதிகாரிகள் கூறிவிட்டனர். விவசாயிகளும் இதை கசப்பு மருந்தாக ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. நட்ட பயிர்களை காப்பாற்ற முடியாத சோகத்தில் விவசாயிகள் இருக்கும் நிலையில் அரசிடம் நிவாரணம் கேட்டு போராட வேண்டியிருக்கிறது.

பயிர் பாதிப்பு குறித்து மனுக்களை அளிக்குமாறு வேளாண்மைத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனால் கோரிக்கை மனுக்களுடன் விவசாயிகள் நடையாய் நடந்து வருகிறார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆனால் அரசுத் தரப்பில் ரூ.4 ஆயிரம் கூட வழங்கப்படாது.

ஆனால் 90 நாள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் ஒவ்வொரு விவசாயிக்கும் செலவு ஏற்பட்டிருக்கிறது. எனவே அரசு வழங்கும் நிவாரணமும் யானை பசிக்கு சோளப்பொரி போன்றுதான் இருக்கும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x