Published : 25 Jul 2022 08:12 PM
Last Updated : 25 Jul 2022 08:12 PM
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க தமிழக அரசு இடம் ஒதுக்க வலியுறுத்தி பாஜக நடத்த திட்டமிட்டிருந்த பாத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சாந்தகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு ஒதுக்காமல் உள்ளது. இதனால் ஜவுளி பூங்கா திட்டம் தாமதமாகி வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருத்தங்கல் முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமத்தூர் வழியாக விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. பாஜகவுக்கு அனுமதி மறுத்து சிவகாசி டிஎஸ்பி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தோம்.
இதனை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 25-ல் விழிப்புணர்வு பாத யாத்திரைக்கு அனுமதி கோரி மனுதாரர் சிவகாசி டிஎஸ்பியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை டிஎஸ்பி பரிசீலித்து நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுடன் ஜூலை 23-ல் டிஎஸ்பியிடம் பாத யாத்திரைக்கு அனுமதி கோரி மனு அளித்தோம். அந்த மனுவை நிராகரித்து டிஎஸ்பி ஜூலை 23-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவு ஜூலை 24-ல் எனது வீட்டில் ஒட்டப்பட்டது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே டிஎஸ்பியின் உத்தரவை ரத்து செய்து பாத யாத்திரை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மலையேந்திரன் வாதிட்டார். பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27-க்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT