Published : 25 Jul 2022 07:52 PM
Last Updated : 25 Jul 2022 07:52 PM
மதுரை: “திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள்தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்” என மதுரையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்தார்.
மின் கட்டண உயர்வை கண்டித்தும், அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதுரை முனிச்சாலை பகுதியில் இன்று மாநகர அதிமுக செயலாளரும், அமைப்பு செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி திமுகவுக்கு எதிராகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது ''அதிமுக என்பது கே.பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இக்கூட்டம். இது காசுக்காக அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. தானா சேர்ந்த கூட்டம். ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை வருடத்தில் ஒன்றுமே திமுக செய்யவில்லை.
மக்கள் கடனில் தவிக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் செல்கிறது. கலைஞருக்கு ரூ.81 கோடியில் கடலில் பேனா கட்டுகிறார்களாம். கடன், பசி பட்டினியில் மக்கள் தவித்து கொண்டுள்ளபோது கலைஞர் பேனாவுக்கு சிலை அவசியமா என்று திமுகவினர் கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்கவில்லை. கலைஞருக்கு கடலில் பேனா வைக்க பணம் உள்ளது. வாக்களித்த மக்களுக்கு பணம் இல்லையா?
நீட்டை ரத்து செய்ய என் தந்தைக்கு தான் சூசகம் தெரியும் என உதயநிதி சொன்னார். இப்போ வரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. திமுக வாக்குறுதி கொடுத்தும் இரண்டு முறை நீட் தேர்வு நடைபெற்று விட்டதே. பிணத்தை வைத்து, மாணவர்களின் உயிரை வைத்து அரசியல் நடத்திய திமுக, இன்று நீட் தேர்வை ரத்து செய்யாததற்கு பதில் சொல்ல வேண்டும்.
ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திய விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் தற்போது ஆளையே காணவில்லை. திருமாவளவன், வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியினர் தற்போது எந்த நிகழ்வுக்கும் வாயை திறப்பதே இல்லை.
லெஜண்ட் சரவணனை போல ஸ்டாலின் செஸ் போட்டி விளம்பரத்தில் வந்து செல்கிறார். ஆனால், உண்மையான செஸ் சாம்பியன்களை அதில் காணோம். இப்படிதான் திமுக ஆட்சி நடக்கிறது. திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்'' என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT