Published : 27 Sep 2016 08:57 AM
Last Updated : 27 Sep 2016 08:57 AM

உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி

சங்கிலித் தொடர் விளைவு என்று ஒன்று உண்டு. கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல், பல்லுயிர் என பல்வேறு சங்கிலித் தொடர் விளைவுகளுடன் பின்னிப் பிணைந்த ஏராளமான சமூகங்களின் கூட்டு இயக்கமே இந்த உலகத்தின் ஒட்டுமொத்த இயக்கம். இவற்றில் இருந்தும் மேம்படுத்தப்பட்ட சங்கிலித் தொடர் விளைவு ஒன்று உண்டு. நவீன சங்கிலித் தொடர் விளைவு அது. ஆங்கிலத்தில் Domino effect என்பார்கள். அழகாக, அறிவியல்பூர்வமாக, புத்திசாலித்தனமாக திட்டமிடப்பட்ட கட்டமைப்பின் இயக்கம் இது. ஒரு சிறு பந்தை உருட்டிவிட்டாலோ அல்லது லேசாக ஒரு புத்தகத்தைத் தட்டிவிட்டாலோ அடுத்தடுத்து நடக்கும் அழகான தொடர் இயக்கம் அது. எளிமையாகப் புரிய வேண்டும் எனில், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் டொமினோ எஃபெக்ட் (Domino effect) விளையாட்டுக்களைப் பாருங்கள்.

சங்கிலித் தொடர் விளைவு பெரியதில் இருந்து தொடங்கு வதில்லை. சிறியதில் இருந்து தொடங்குகிறது. பெரியதாக திட்டமிடுவது இல்லை. சிறியதாக ஆனால், சிறப்பாகத் திட்டமிடுகிறது. அத்தனைக்கும் ஆசைப்படுவதில்லை. தேவைக்கு மட்டுமே தேடிக் கொள்கிறது. அடுத்தடுத்த தொடர் விளைவுகளில் அது படிப்படியாக வலுவடைகிறது. நீட்சியாக மாபெரும் மலைகளையும் புரட்டிப்போடுகிறது. பெரும் சவால்களையும் சாதாரணமாக எதிர்கொள்கிறது. காந்தி விரும்பிய அலை வட்ட வடிவம் இது. கொசுவத்திச் சுருள் போன்ற விரிவடையும் வட்டத் தில், எல்லாப் புள்ளிகளும் சமநிலையில் இருக்கும்.

இந்த அறிவியலை அப்படியே சமூகங்கள் அல்லது கிராமங்களுக்குப் பொருத்திக் கொள்ளுங்கள். அவைதான் பண்டைய இந்தியக் கிராமங்கள். லட்சக் கணக்கான சமூகங்கள் வலைப் பின்னல்கள் போலவும் நரம்பு மண்டலங் களைப்போலவும் ஒன்றை ஒன்றுச் சார்ந்து பின்னிப் பிணைந்து வலுவான தேசத்தை உருவாக்கியிருந்தன. அந்த தேசத்தில் இன்றைய அளவுக்கு வறுமை, பசி, பட்டினி, பஞ்சம் இல்லை. நகரங்கள் குறைவாக இருந்தன. மன்னர்களும் அவரது பிரதானிகள் மட்டும் நகரங்களில் வசித்தார்கள். மக்கள் கிராமங்களில் வசித்தனர். நகரங்கள் கிராமங்களைச் சார்ந்திருந்தன. விவசாயம், கால்நடை, தொழில் உற்பத்தி, மனித உழைப்பு, இயற்கை வளங்கள் அனைத்தும் கிராமங்களில் கொட்டிக்கிடந்தன. கடல் கடந்தும் வாணிபம் செழித்தது. கிராமங்களின் பொருளாதாரமே தேசத்தின் பொருளாதாரமாக இருந்தது. அது சிக்கனப் பொருளாதாரமாகவும் சேமிப்புப் பொருளாதாரமாகவும் இருந்தது. பங்கீட்டுப் பொருளாதாரமாகவும் பசுமைப் பொருளாதாரமாகவும் இருந்தது. பண்பாட்டுப் பொருளாதாரமாகவும் தன்னிறைவுப் பொருளாதாரமாகவும் இருந்தது.

அந்த கிராமங்களில் சிறந்த ஆளுமைகள் இருந்தார்கள். கட்டுப் பாடுகள், விதிமுறைகள் இருந்தன. மன்னராட்சிக் காலத்திலும்கூட மக்களுக்குள் அடுக்குமுறை ஜனநா யகம் நிலவியது. அந்த அடுக்குமுறை ஜனநாயகத்தில் ஒவ்வோர் அடுக்கும் அதனதன் பணியை மட்டும் சிறப்பாகச் செய்தன. கீழ் இருந்து மேல் மட்டம் வரை இந்த சமூகச் சங்கிலித் தொடர் சீராக இயங்கியது. இந்தச் சமூகங்கள் சுயசார்புடையவைகளாக திகழ்ந்தன. பேரழிவு, போர்கள் போன்ற நிகழ்வுகளைத் தவிர அவை அரசுகளை எதிர்பார்க்கவில்லை. அரசுகள்தான் சமூகங்களை எதிர்பார்த்திருந்தன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, ஆதிச்சநல்லூர், கீழடி நாகரிகங்கள் மலர்ந்தன. பூம்புகார், கொற்கை போன்ற துறைமுகங்களும், தஞ்சை பெரிய கோயில், கல்லணை போன்ற பிரம்மாண்டமான கட்டுமானங்களும் எழுந்துநின்றன. இவை எல்லாம் நமது சமூக அடித்தளம் வலுவாக இருந்தது என்பதை நிருபிக்கும் வரலாற்று ஆதாரங்கள்.

அதே சமயம் இந்த சமூக அமைப்பில் பிரச்சினைகள் இல்லை என்றும் சொல்ல முடியாது. குறிப்பாக, சமூகத்தில் மிக ஆழமாக ஊடுருவியிருந்தது சாதியம். தொழில் சார்ந்த சாதிய அடுக்குகள் இருந்தன. தீண்டாமை கடுமையாக இருந்தது. மேட்டுக்குடியினர் ஊரின் மையப் பகுதியிலும் மேடான பகுதியிலும் வசித்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஊருக்குள் ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசித்தனர். மேலும், அது ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாக இருந்தது.

இந்த நிலையில்தான் இந்தியச் செழு மையைக் கண்டு ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்தார்கள். 1835-ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய மெக்காலே, ‘இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன். பிச்சைக் காரர்களையும் திருடர்களையும் பார்க்க முடிய வில்லை. எங்கும் வளங்கள் நிறைந்திருக் கின்றன. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார் கள். ஆன்மிகமும் கலாச்சாரமும் ஒழுக்கமும் தேசத்தின் ஆன்ம பலமாக இருக்கின்றன. அவற்றைத் தாண்டி இந்தியாவை நாம் வெற்றிக்கொள்ள முடியாது’ என்றார். அப்ப டியே அழித்தார்கள். பிரித்தாளும் சூழ்ச்சிகளால் சமூகங்களை பிளவுப்படுத்தினார்கள்.

அந்நிய மோகத்தால் பாரம்பரிய சமூகங்கள் நகரப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன. நகரப் பொருளாதாரம் என்பது நுகர்வுப் பொருளாதாரம். அது பதுக்கல் பொருளாதாரம். அது ஆடம்பரப் பொருளாதாரம். அது பற்றாக்குறைப் பொருளாதாரம். அது பேராசைப் பொருளாதாரம். அது பேரழிவுப் பொருளாதாரம். அது பண்பாட்டொழிப்புப் பொருளாதாரம். அது இயற்கையொழிப்புப் பொருளாதாரம். மெல்ல மெல்ல கிராமக் கட்டுமானங்கள் சிதையத் தொடங்கின. புதிய கல்வியாலும் மேலை நாகரிகத்தாலும் மதத்தாலும் சாதியாலும் பிளவுபட்டது தேசம். பாரம்பரிய சமூகங்கள் ஆங்கிலேய அரிதாரம் பூசிக்கொண்டன. சுயசார்புடைய மக்கள் பிரபுத்துவ காலனியாதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்தார்கள்.

மக்கள் வாழ்வாதாரங்களான காடுகள், நீர்நிலைகள் அரசு ஆவணங்களுக்குள் அடைக்கப்பட்டன. அதிகாரிகள் அவற்றை ஆண்டார்கள். மக்கள் அடிமைகளானார்கள். மகிழ்ச்சியை இழந்தார்கள். கலாச்சாரத்தை இழந்தார்கள். வளங்களை இழந்தார்கள். பஞ் சத்தையே அறியாத தேசம் செயற்கைப் பஞ்சத்துக்கும் தொற்று நோய்களுக்கும் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத் தது. நாட்டின் நரம்பு மண்டலமாகத் திகழ்ந்த சங்கிலித் தொடர் சமூகங்கள் அறுத்தெறியப் பட்டன. சிறியதில் இருந்து பெரியதை நோக்கிச் சென்ற ‘சங்கிலித் தொடர் விளைவு’ என்னும் நமது பாரம்பரிய அறிவியல் அழிந்தது. கீழ் இருந்து மேல் நோக்கிச் சென்ற மக்களின் அதி காரங்கள் அதிகார மட்டத்தின் மேல் இருந்து கீழ் நோக்கி நகர்ந்து மக்களை நசுக்கத் தொடங்கின.

ஆனாலும் அரும்பாடுபட்டு ரத்தம் சிந்தி, லட்சக்கணக்கான உயிர்த் தியாகங்களை செய்து ஆங்கிலேயரின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டார்கள் நம் தேசத் தலைவர்கள். தேசத்தை அதன் பழைய சமூகக் கட்டமைப்பில், ஆனால் தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற தீமைகளைக் களைந்து புனரமைக்க விரும்பினார் காந்தி. அதற்காக அவர் கண்ட கனவுதான் கிராம சுயராஜ்ஜியம். ‘கிராமங்களே இந்தியாவின் இதயங்கள்’ என்றார் அவர். குடிமக்கள் ஒவ்வொருவரின் உள்ளங்களின் ஆட்சியை விரும்பினார் அவர். அதுவே உள்ளாட்சி. அது உங்கள் ஆட்சி.

ஆனால், இன்று? பஞ்சாயத்துக்கு இருந்த பிரத்தியேக அமைச்சகத்தை ஓரம் கட்டிவிட்டது மத்திய அரசு. 7 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை ரூ.96 கோடியாக சுருக்கிவிட்டது அது. தமிழகத்தில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறையை ரத்து செய்துவிட்டது அரசு. இந்த நிலையில்தான் விரைவில் தொடங்கவிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். இதுபோன்றதொரு சூழலில் இந்தியாவின் இதயங்கள் எப்படி இருக்கின்றன? உங்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்பட்டார்களா? இனி வரப்போகும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எப்படிச் செயல்பட வேண்டும்? அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

வாருங்கள் ஓர் இதயபூர்வமான பயணத்தை நம் கிராமங்களில் இருந்து தொடங்குவோம்!

- பயணம் தொடரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x