Published : 25 Jul 2022 07:43 AM
Last Updated : 25 Jul 2022 07:43 AM
சென்னை: தமிழகத்தில் 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.20 லட்சம் பேர்பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம்ஏற்படுத்தப்பட வேண்டும்.
13-வது ஊதிய ஒப்பந்தம், ஓராண்டு தாமதமாக 2017-ல் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 14-வது ஊதிய ஒப்பந்தம் தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை.
எனவே, ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 19-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
அதன்படி, ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள், தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணாவிட்டால், ஆக. 3-ம் தேதியோ அல்லது அதற்குப் பின்னரோ, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடஉள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தொழிலாளர் நலத் துறை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் அளித்த மனுவில் இடம்பெற்ற கோரிக்கைகள் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகமானது பொதுமக்களால் பயன்படுத்தப்படும் சேவையாகும். எனவே, வேலைநிறுத்தம் செய்யாமல் பேச்சுவார்த்தையின் முடிவை எதிர்நோக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT