Published : 29 Jun 2014 10:37 AM
Last Updated : 29 Jun 2014 10:37 AM
கேரளத்தில் மாம்பழம் சாப்பிட்ட மக்களுக்கு வயிற்றுபோக்கு ஏற் பட்டதன் காரணமாக, தமிழக மாம்பழங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் கேரளத்துக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப் படுகின்றன. இதில் தேனி மாவட்டத்தில் இருந்து சீசன் காலங்களில், தினந் தோறும் சுமார் 100 டன் வரை மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளத்தில் மாம்பழம் சாப்பிட்ட பலருக்கு வயிற்றுபோக்கு, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாம்பழங்களை விற்பனைக்கு வருவதை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் கர்நாடகம், ஆந்திரத்தில் இருந்து அனுப்பப்படும் மாம்பழங்களுக்கும் கேரளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
இந்தத் தடையின் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு மாம்பழங்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படாததால், பல குடோன்களில் மாம்பழங்கள் தேங்கி கிடக்கின்றன. மேலும் அனைத்து காய்கறி கடைகளிலும் மாம்பழங்கள் குவிந்து கிடக்கின்றன.
இதுகுறித்து தேனி அல்லிநகரம் மா விவசாயி தவமணி ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறும்போது, ’’தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாம்பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் கேரளத்துக்கு மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை, சில வியாபாரிகள் அனுப்பி வைத்துவிட்டதாகவும் அதனை வாங்கி சாப்பிட்ட மக் களுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறி 2 நாட்களுக்கு முன்பு கேரள அரசு மாம்பழங்களை அனுப்ப தற்காலிகமாக தடை விதித்துவிட்டது. தற்போது 10 முதல் 20 டன் மாம்பழங்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மாம் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள பல நூறு டன் மாம்பழங்கள் தேனி மாவட்டத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டு கிலோ ரூ.30-க்கு விற்பனையான காசா ரக மாம்பழம் தற்போது ரூ.15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கேரள அரசு தடை விதித்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT