Published : 24 Jul 2022 06:57 PM
Last Updated : 24 Jul 2022 06:57 PM
சேலம்: சேலம் அருகே கொளத்தூரில் விவசாய தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர், ஆலமரத்துபட்டி கிராமத்தில் கூழ் கரடுதோட்டம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் வசிக்கும் விவசாயி புஷ்பநாதன். இவர் தனது விவசாய நிலத்தில் வன விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க, மின் வேலி அமைத்துள்ளார்.
இன்று காலை சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை புஷ்பநாதன் தோட்டத்துக்குள் செல்ல முயன்றுள்ளது. அப்போது, மின் வேலி கம்பியில் சிக்கிய யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடம் வந்த மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஷ்பநாதன் தனது விவசாய தோட்டத்தில், அரசின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக வனத்துறை அதிகாரிகள் புஷ்பநாதனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT