Published : 24 Jul 2022 06:04 PM
Last Updated : 24 Jul 2022 06:04 PM
மதுரை: தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், இன்று மதுரையில் எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேனியில் நாளைமறுநாள் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் 25,000 பேரை திரட்ட முடிவு செய்துள்ளனர்.
மதுரையில் திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில் தேனியில் நாளை மறு நா 26ம் தேதி நடக்கிறது. தற்போது தேனி மாவட்டச் செயலாளராக இருந்த சையத்கான் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார். அவருக்கு பதிலாக கே.பழனிசாமி அணி அதிமுகவிற்கு புதிய மாவட்டச் செயலாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால், தேனி மாவட்டத்தில் நாளை நடக்கும் அதிமுக ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பு, தற்போது அதிமுக சட்டசபை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் நேற்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை, மதுரைக்கு அழைத்து டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் வைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மீறி தேனி மாவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், தொண்டர்கள், நிர்வாகிகள் உள்பட 25,000 பேரை மாவட்டம் முழுவதும் அழைத்து வந்து பங்கேற்க வைத்து மாவட்டத்தில் கே.பழனிசாமியின் செல்வாக்கை நிரூபிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ஆர்பி.உதயகுமார் பேசுகையில், ‘‘விசுவாசத்தின் அடையாளமாக தேனி மாவட்டம் திகழ்கிறது. தற்போது அதிமுகவில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் தர்மம் வெற்றி பெற்றுள்ளது. இந்த இயக்கத்தை நாம் காப்பாற்றி வரும்வேளையில் சிலர் பாவங்களை செய்கிறார்கள். தொண்டர்களின் புனித ஸ்தலமாகும் கட்சித் தலைமை அலுவலகத்தை 50 குண்டர்கள் படை காலால் எட்டி உதைத்து பாவச் செயல் செய்தனர். அதனால்தான், நொறுங்கி போன தொண்டர்கள் இன்று கே.பழனிசாமி பின்னால் இருக்கிறார்கள். இதை தேனியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிரூபிக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வத்திடம் 7 முறை பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தோம். அவர் மறுத்தவிட்டார்.
தலைமைகழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவரும் கே.பழனிசாமி பக்கம் உள்ளனர். அதனால், 26ம் தேதி தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் பதில் சொல்லும் வகையில் இருக்க வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT