Published : 24 Jul 2022 05:22 PM
Last Updated : 24 Jul 2022 05:22 PM
மதுரை; ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுகவில் மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து அதிமுக தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திரட்டி கொண்டு வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து அதிமுகவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கே.பழனிசாமி பக்கம் சென்ற மாவட்டச் செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை இன்று அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவில் மாநகர மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பா ஆகியோர் கூண்டோடு கே.பழனிச்சாமி பக்கம் சென்றனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 90 சதவீதம் பேரும் அவர்களுடன் கே.பழனிசாமி அணிக்கு சென்றனர். ஆனால், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மிக சிலரே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மதுரையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் திமுகவுக்கு சென்றார். அதபோல், முன்னாள் சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவிற்கு சென்றார். முன்னாள் தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், கே.பழனிசாமி அணிக்கு சென்றார்.
அதனால், மதுரையை பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஒரளவு அறிந்த முகமாக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மட்டுமே உள்ளார். இவர், தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி அதிமுகவில் மதுரை மாநகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செல்லூர் கே.ராஜூவுக்கு எதிராக மாநகரில் அரசியல் செய்து வந்தார். அதனாலே, செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து இவரை ஓ.பன்னீர்செல்வம் தனது அணியில் மாநகர மாவட்டச் செயலாளராக நியமனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோபாலகிருஷ்ணன் மாநகராட்சி துணை மேயராக இருந்தவர்.
கே.பழனிசாமி அணியில் மாநகர செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளார். இவரை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை் கோபாலகிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கொண்டு வர முடியுமா? செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து மாநகரில் அரசியல் செய்ய முடியுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
கோபாலகிருஷ்ணன் தரப்பினர் கூறுகையில், ‘‘மாநகர செயலாளராக குறுநில மன்னர் போல் செல்லூர் ராஜூ 22 ஆண்டுகள் இருக்கிறார். அவர் இளைஞர்கள் யாரையும் கட்சியில் வளர்த்து விடுவதில்லை. அவரை சுற்றி மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். அதனாலே, அதிமுகவில் இதற்கு முன் இருந்த பல இளம் நிர்வாகிகள் பலர் திமுக, பாஜக உள்ளிட்ட மாற்று கட்சிகளுக்கு சென்றனர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் கோபாலகிருஷ்ணனை மாவட்டச் செயலாளராக நியமனம் செய்துள்ளதால் கே.பழனிசாமி அணியில் மதுரை மாநகர அதிமுகவில் செல்லூர் ராஜூ மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் தற்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் திரும்ப தயாராகிவிட்டனர், ’’ என்றார்.
கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘என்னை போன்ற அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள்தான் இனி மதுரை மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகளாக செயல்பட போகிறார்கள். அதற்காகதான் என்னை போன்ற இளைஞரை மாநகர மாவட்டச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT