Published : 24 Jul 2022 12:45 PM
Last Updated : 24 Jul 2022 12:45 PM

சென்னையில் தீவிர தூய்மைப் பணி; 128  மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 23.07.2022 அன்று நடைபெற்ற தீவிர தூய்மை பணியின் மூலம் நீர்நிலைகளின் அருகே இருந்த 128 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு, கரையோரங்களில் 602 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஆலோசனையின்படி, சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த ''நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Cities)'' தொடங்கப்படும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-2023 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

தமிழக முதல்வர் நகர்ப்புற பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணித் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, 03.06.2022 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலத்தில் தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மாதத்தின் 2 ஆம் மற்றும் 4 ஆம் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2022 ஜூலை மாதத்தின் நான்காம் சனிக்கிழமையான 23.07.2022 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணி பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த தூய்மை பணியில் நீர்நிலைகளிள் அருகில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளின் கரையோரங்களில் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள கோயில் குளங்கள் உட்பட 298 நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு 166 இடங்களில் தீவிரத் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேற்குறிப்பிட்ட 166 நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் தீவிரத் தூய்மைப்பணியின் மூலம் 128.05 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு, நீர்நிலைகளின் கரையோரங்களில் 602 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் பொதுமக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்களிப்புடன் நடைபெற்ற தீவிர தூய்மை பணிகளில் பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் இதர பொது இடங்களில் தீவிரத் தூய்மைப்பணியின் மூலம் 192.36 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்கள் மற்றும் சாலை மையத்தடுப்புகளில் 916 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த தீவிரத் தூய்மைப்பணிகளுக்காக 23 ஜே.சி.பி, 63 லாரிகள் மற்றும் 127 இதர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நமது குப்பை நமது பொறுப்பு என்பதனை உணர்ந்து பொது இடங்களில் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தங்கள் இல்லங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x