Published : 24 Jul 2022 11:21 AM
Last Updated : 24 Jul 2022 11:21 AM

மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்: தமிழகமும் பின்பற்றலாம் ஜார்க்கண்ட் மாநில திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப்படம்.

மரம் வளர்த்தால் இலவச மின்சாரம்: தமிழகமும் பின்பற்ற வேண்டிய ஜார்க்கண்ட் மாநிலத்தின் திட்டம்: ராமதாஸ்

மரம் வளர்த்தால் இலவச மின்சாரம் என்ற ஜார்க்கண்ட் மாநிலத்தின் திட்டத்தை தமிழகமும் பின்பற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்றுதனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறார். சுற்றுச்சூழலை காக்க பசுமைப்போர்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.

புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளர்க்க வேண்டியது. மிகவும் அவசியமானது. அதனால் தான் பிறந்தநாள், திருமண நாளில் மரக்கன்று நடும் பாட்டாளிகளுக்கு நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.

ஒரு மரத்திற்கு 5 அலகு மின்சாரம் என்பது மிகவும் குறைவான வெகுமதியாக இருக்கலாம். ஆனால், சுற்றுச்சூழலைக் காக்க மரக்கன்று நட வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தும். இன்றைய சூழலில், உலகையும், உலக மக்களையும் காக்க இந்த உணர்வு தான் தலையாயத் தேவையாகும்.

மரம் நட்டால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத்துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் கான்க்ரீட் பாலைவனங்களான நகர்ப்புறங்கள் பசுமை பூமியாக மாறும். ஜார்கண்ட் அரசுக்கு பாராட்டுகள்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x