Published : 24 Jul 2022 04:31 AM
Last Updated : 24 Jul 2022 04:31 AM

போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை - தமிழக அரசு அறிக்கை வெளியீடு

மதுரை: போலி பாஸ்போர்ட் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் உட்பட 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரையில் இலங்கையைச் சேர்ந்த சிலர் 2019 செப்டம்பரில் இந்திய பாஸ்போர்ட் பெற்று, வெளிநாடு செல்ல முயற்சி செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி, அவ்வாண்டு செப்டம்பர் 27-ம் தேதி மதுரை நகர க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் பாஸ்போர்ட் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், மதுரையில் செயல்பட்டு வந்த 4 பயண முகவர்களையும் கைது செய்தனர். அவர்களது அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 124 பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர் விசாரணையில், விதிகளை மீறி 51 பேர் பாஸ்போர்ட் பெற்றதும், இதில் 175 பாஸ்போர்ட்களில், 28 பாஸ்போர்ட்களை இலங்கைத் தமிழர்கள் போலி ஆவணங்கள் மூலம் பெற்றதும் தெரியவந்தது.

மேலும், அந்த 28 பாஸ்போர்ட் பெற்றவர்களில் இலங்கையைச் சேர்ந்த 7 பேர் மீது மதுரை நகர க்யூ பிரிவிலும், மீதமுள்ள 21 பேர் மீது சென்னை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கோயம்புத்தூர் நகர க்யூ பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

இதுதவிர, 30 பாஸ்போர்ட்களை பெற்றது இந்தியர்களா அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களா எனவும் விசாரணை நடக்கிறது. மீதமுள்ள 117 பாஸ்போர்ட்களில் ஒரு போலி பாஸ்போர்ட் தவிர, மற்றைய 116 பாஸ்போர்ட்கள் இந்தியர்களுக்குரியது எனக் கண்டறியப்பட்டது.

மதுரை நகர க்யூ பிரிவு விசாரணையில், 475 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதுடன், 340 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 4 இலங்கைத் தமிழர்கள், 11 பயணமுகவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற்ற 7 பேர், 13 பயண முகவர்கள், 5 காவல் துறை அலுவலர்கள், 14 மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், 2 அஞ்சல்துறை அலுவலர்கள் உட்பட மொத்தம் 41 பேர் குற்றம் புரிந்துள்ளதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில், காவல் ஆய்வாளர் இளவரசுக்கு ராமநாதபுரம் டிஐஜி, தலைமைக் காவலர் கந்தசாமிக்கு மதுரை தெற்கு சரகதுணை ஆணையர், காவலர்கள் கவியரசு, ஆனந்த் ஆகியோருக்கு சிவகங்கை எஸ்.பி. ஆகியோர் குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான முன் அனுமதியை வழங்கியுள்ளனர்.

அஞ்சல் ஊழியர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சிவகங்கை மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும், பாஸ்போர்ட் சட்டப்படி குற்ற நடவடிக்கை மேற்கொள்ள, மதுரை ஆட்சியரும் முன் அனுமதி வழங்கியுள்ளார். இதில் அனைத்து காவல் அதிகாரிகளும் அடங்குவர்.

இதுதவிர, அன்றைய மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் சிவக்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். அதேபோல, 14 கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது அமைச்சகம் கேட்ட விளக்கங்களுக்கு, உரிய ஆவணங்கள் மற்றும் விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும்,வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து உரிய முன் அனுமதி இதுவரை பெறப்படவில்லை.

மதுரை க்யூ பிரிவு குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, 41 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

பாஜக குற்றச்சாட்டு காரணமா?

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டு இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஒரே காவல் நிலையம் மூலம் 72 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆளுநர், உள்துறைச்செயலரிடம் புகார் மனு அளித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி, உள்துறைச் செயலரிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று முன்தினம் மனு அளித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் என்ன நடந்துள்ளது என விளக்கியும், காவல் துறையினர் உட்பட 41 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x