Published : 30 Sep 2016 07:26 PM
Last Updated : 30 Sep 2016 07:26 PM

வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் என்ன? - வழக்கறிஞர் ரமேஷ் எச்சரிக்கைத் தகவல்

வதந்தி பரப்புவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 505-ன் கீழ் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், வாரண்ட் இல்லாமலே கைது செய்து காவலில் வைக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என். ரமேஷ் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தவறான தகவல் பரப்புவோர் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வரின் உடல்நிலை தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவர்களுக்கு சட்ட ரீதியாக என்ன தண்டனை விதிக்கப்படும்? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என். ரமேஷ் சில தகவல்களைக் கூறினார்.

''வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற எந்த ஊடகத்தின் வழியாகவும் வதந்திகளை பரப்புவது, அதன் மூலம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திஅச்சுறுத்துவது, குற்றங்களைத் தூண்டுவது ஆகியவற்றுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 505-ன் கீழ் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும். வதந்திகளை பரப்பும் விஷமிகளை வாரண்ட் இல்லாமலே கைது செய்து காவலில் வைக்க முடியும்.

மேலும், வதந்திகளை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மேல் பல்வேறு சட்டப் பிரிவுகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கமுடியும்.

தனியார் சொத்துகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அந்த சொத்துகளுக்கு ஈடான நஷ்ட ஈட்டுத்தொகையை சேதம் ஏற்படுத்தியவர்களிடம் பெறவும் சட்டத்தில் இடம் உள்ளது.

சமூக வலைதளங்களில் , வதந்திகளின் பாதிப்பையும் , விளைவையும் தெரியாமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் நபர்கள் கூட சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். ஒரு செய்தியை உறுதி செய்யாமல் பரப்புவதை தவிர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு'' என்கிறார் வழக்கறிஞர் என்.ரமேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x