Published : 23 Jul 2022 05:45 PM
Last Updated : 23 Jul 2022 05:45 PM
திருச்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி நிறைவை எட்டி வருகிறது. இந்த ஆண்டும் வேளாண்துறை நிர்ணயித்த இலக்கை விஞ்சி சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி ஏறத்தாழ 3.5 லட்சம் ஏக்கரில் நடைபெறும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்கென வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-க்கு பதிலாக மே 24-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனிடையே நிகழாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 1.06 லட்சம்,திருவாரூர் 1.02 லட்சம், நாகப்பட்டினம் 50 ஆயிரம், மயிலாடுதுறை 97 ஆயிரம், திருச்சி 12,400, கடலூர் 44 ஆயிரம், அரியலூர் 12 ஆயிரம் என மொத்தம் 4,23,400 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதாலும், வடிமுனைக் குழாய் உதவியோடும் விவசாயிகள் நாற்றுகளை விட்டு சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.
இதில், இதுவரை, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.31 லட்சம், திருவாரூர் 97,400, நாகப்பட்டினம் 45 ஆயிரம், மயிலாடுதுறை 94 ஆயிரம், திருச்சி 6,200, கடலூர் 41 ஆயிரம், அரியலூர் 12 ஆயிரம் என மொத்தம் 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில், தஞ்சாவூர்(7,500), திருவாரூர்(27 ஆயிரம்), நாகப்பட்டினம்(30 ஆயிரம்), மயிலாடுதுறை(6,400) ஆகிய இடங்களில் மொத்தம் ஏறத்தாழ 70,900 ஏக்கரில் நேரடி விதைப்பும் செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறைந்த வயதுடைய ரகங்களை தான் விவசாயிகள் பயிரிடுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து இன்னும் ஏறத்தாழ 75 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நாற்றங்காலில் நாற்றுகள் தயாராக உள்ளன.நடவுப் பணிகளும் முழுவீச்சில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் கூறுகையில், ”முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது கடந்த ஆண்டில் அதிக பரப்பளவில் (ஏறத்தாழ 3.85 லட்சம் ஏக்கர்)குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. நிகழாண்டு மேட்டூர் அணை வழக்கத்துக்கு முன்னதாகவே திறக்கப்பட்டதாலும், ஆறுகள், வாய்க்கால்கள் பெரும்பாலானவை தூர் வாரப்பட்டதாலும் அனைத்து இடங்களுக்கும் தண்ணீர் தங்கு தடையின்றி சென்று சேர்ந்தது.
மேலும், விவசாயிகளுக்கு ரூ.61 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் ரசாயன உரங்கள், மானிய விலையில் விதைகள் ஆகியவை வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை மூலம் வழங்கப்பட்டன. விவசாயிகளும் ஆர்வத்துடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விஞ்சும் வகையில் நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுவை பருவ நெல் நாற்று நடவுப் பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள்ளாக முடிக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT