Published : 23 Jul 2022 05:33 PM
Last Updated : 23 Jul 2022 05:33 PM
சென்னை: "சென்னையின் வரலாற்று அடையாளமாகத் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிப் பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்றவர்களையும், ராமானுஜம், எஸ்.ஆர்.சீனிவாச வரதன் உள்ளிட்ட கணித மேதைகளையும் உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகம், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட குடியரசுத் தலைவர்களை நாட்டிற்கு வழங்கியுள்ளது.
இத்தகைய போற்றுதலுக்கும், பெருமிதத்திற்கும்,175 ஆண்டு பாரம்பரியத்துக்குரிய, சென்னையின் வரலாற்று அடையாளமாகத் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில தாழ்த்தப்பட்டோர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு, மனித உரிமை ஆணையம், உயர்நீதிமன்றம் என அனைத்திலும் சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பட்டியலினத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வு விவகாரத்தில், சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியர்களின் பதவி உயர்வு மூன்றாண்டுகளில் வழங்கப்பட வேண்டும் என்று விதிகள் சொன்னாலும் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை இவர்களின் பதவி உயர்வு பல்கலைக்கழகத்தால் இழுத்தடிக்கப்படுவதாக தெரிகிறது.
சாதிய பாகுபாடுகளைக் கையாள்வதற்காக பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள தீர்வுக்குழுவிற்கு உரிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பதால், பாதிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள், பணியாளர்கள், யாரிடம் புகார் அளிப்பது என்பது குறித்து திணறி வருகின்றனர்.
எனவே, போற்றுதலுக்குரிய சென்னை பல்கலைக்கழகத்தில் சாதிய வன்கொடுமை புகார்களுக்கு ஆளாவதை இனியும் அனுமதிக்க கூடாது. சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் சாதி பாகுபாட்டிற்கு விரைவில் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT