Last Updated : 23 Jul, 2022 03:02 PM

3  

Published : 23 Jul 2022 03:02 PM
Last Updated : 23 Jul 2022 03:02 PM

விமானத்தில் மயங்கிய சக பயணி: முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: விமானத்தில் மயங்கிய சக பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசைக்கு சக பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணியளவில் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணித்தார்.

நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், காலை 4 மணியளவில் ‘‘யாராவது மருத்துவர் இருக்கீங்களா? சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்’’ என்று விமான பணிப்பெண் ஒருவர் அறிவிப்பு விடுத்தார்.

இந்த அறிவிப்பை கேட்ட உடனே ஆளுநர் தமிழிசை சென்று பார்த்தபோது, பயணி ஒருவருக்கு உடல் முழுவதும் வியர்த்து, மயங்கிய நிலையில் இருந்துள்ளார். சற்றும் தாமதிக்காத ஆளுநர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். அந்தப் பயணி கண் விழிக்கும் வரை, அவர் அருகிலேயே ஆளுநர் அமர்ந்து பயணித்தார். சிறிது நேரத்தில் அந்தப் பயணியின் உடல் நிலை சற்று சரியாகி கண் விழித்து முகத்தில் சிரிப்பை பார்த்த பின்னரே உடன் பயணித்த பயணிகள் அனைவருக்கும் நிம்மதியானது.

விமானத்தை விட்டு இறங்கியதும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, சரியான நேரத்தில் தகவல் தந்து ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவிய விமான பணிப்பெண்ணுக்கு ஆளுநர் தமிழிசை பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் ராஜ் பவனுக்கு அவர் புறப்பட்டார். அவசர மருத்துவ முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசையை சக பயணிகள் அனைவரும் பாராட்டினர்.

இதனை, சக பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆளுநருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x