Published : 23 Jul 2022 12:57 PM
Last Updated : 23 Jul 2022 12:57 PM

அதிமுக அலுவலகத்தில் கொள்ளை: காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, கட்சி தோற்றுவித்த காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கக்கூடிய அனைத்து அசல் ஆவணங்களும் திருடுபோயுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னயில் அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில், அலுவலகத்தின் உள்ளே இருந்த பொருட்கள் சேதமாகின. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு, சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்பைடைக்க உத்தரவிட்டது. இதன்படி, சீல் அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் கட்சியினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 11-ம் தேதி நடந்த கலவரத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் இருந்த பீரோவை உடைத்து கட்சிக்கு சொந்தமான சொத்துக்கள், மற்றும் கட்சி தொடர்புடைய சொத்துக்களின் அசல் ஆவணங்களை திருடப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிமுக தலைமை அலுவலகம் தற்போது இருக்கக்கூடிய பகுதியின் அசல் பத்திரம், அண்ணா சாலையில் இருக்கக்கூடிய இடத்திற்கான அசல் பத்திரம், கோயம்புத்தூரில் உள்ள இதயதெய்வம் மாளிகையின் அசல் பத்திரம், புதுச்சேரி, திருச்சியில் உள்ள கட்சிக்கு சொந்தமான இடத்தின் அசல் பத்திரம்,பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை தோற்றுவித்ததற்கான அசல் பத்திரம், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அண்ணா அறக்கட்டளை இடத்தின் அசல் பத்திரம், முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களை திருடி சென்றுள்ளனர்.

மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் ரூபாய் பணம், கட்சியின் கணக்கு வழக்குகள் தொடர்பான இரண்டு கணிப்பொறி மற்றும் ஹார்ட் டிஸ்குகள், மற்றும் கட்சிக்காக வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்ற்தழ்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் " என்று புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x