Last Updated : 23 Jul, 2022 06:10 AM

 

Published : 23 Jul 2022 06:10 AM
Last Updated : 23 Jul 2022 06:10 AM

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தெரு கிணறுகள் புனரமைப்பு: ஊராட்சி நிர்வாக முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு

ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் சிதிலமடைந்த தெரு கிணற்றை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி நிர்வாகத்தினர்.

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சிதிலமடைந்த தெரு கிணறுகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிக்கு கிராமப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

ஊரக பகுதிகளில் உள்ள பழைய தெரு கிணறுகளை தூர்வாரி, தூய்மைப்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு ஊராட்சி நிர்வாகம் அப்பணியை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், வெங்கட சமுத்திரம் ஊராட்சியில், வெங்கடசமுத்திரம், பெரிய வெங்கடசமுத் திரம், சின்ன வெங்கடசமுத்திரம், பாட்டூர், அத்திமாகுலப்பல்லி, ராள்ள கொத்தூர், கோவிந்தாபுரம், ரங்காபுரம், பாட்டூர், விநாயகபுரம், இந்திரா நகர் என 10-க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன.

ஆம்பூர் வட்டம், மாதனூர் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் வெங்கடாபுரம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக கிராமப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக் கப்பட்டன. இருந்தாலும், குடி நீர் தேவையை பூர்த்தி செய்வது என்பது கடினமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் உள்ள தெரு கிணறுகளை தூர்வாரி, தூய்மைப்படுத்தி, அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி மன்ற நிர்வாகம் முடிவு எடுத்தது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்படும் தண்ணீரை மக்கள் குடிப்பதற்கு பயன்படுத் தவும், தெரு கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை பொது மக்களின் மற்ற இதர பயன்பாடு களுக்கு பயன்படுத்திக் கொள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து வருவது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

வெங்கடசமுத்திரம், சின்ன வெங்கடசமுத்திரம், பாட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தெரு கிணறுகளை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியில் ஊராட்சி ஊழியர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள தெருக் கிணறுகளில் பாதுகாப்பான முறையில் குழாய்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. கிணறு களில் மருந்துகள் தெளித்து, அதிலிருக்கும் குப்பைக் கழிவு களையும் வெளியே அகற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

கிணறுகளை தூர்வாரி தூய் மைப்படுத்திய பிறகு, கிணற்றின் சுவர்களுக்கு வண்ணம் அடித்து, கிணற்றின் மேல்பாகத்தில் பாது காப்பான முறையில் இரும்பு ஜன்னல்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்ட தெருக்கிணறுகள் தற்போது சீரமைக்கப்பட்டு, மின் பம்புகள் பொருத்தி அதிலிருக்கும் தண்ணீரை பொது மக்களின் இதர பயன்பாட்டுக்கு கொண்டு வரும் ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதேபோல, பிற ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பழுதடைந்து, கேட் பாரின்றி கிடக்கும் தெருக் கிணறு களை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகங்கள் சீரமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள தெருக்கிணறுகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் கோடை காலத்திலும் குடிநீர் பஞ்சம் வர வாய்ப்பில்லை என்பதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான முயற்சிகளை முன் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x