Published : 22 Jul 2022 03:55 PM
Last Updated : 22 Jul 2022 03:55 PM
சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக 4 மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீஸார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக இபிஎஸ் தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 11 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தோம். ஆனால், இந்த வழக்கில் தவறாக தங்களது பெயர்களும் இணைக்கபட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி விடுமுறை என்பதால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி தங்க மாரியப்பன் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில், வழக்கு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கேட்கபட்டது. இதையடுத்து, விசாரணையை 25-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை கைது செய்ய கூடாது என ராயப்பேட்டை காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT