Published : 22 Jul 2022 01:21 PM
Last Updated : 22 Jul 2022 01:21 PM

பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பொருட்கள் மீதான சேவை வரியை நீக்க வேண்டும்: ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆவின் பொருட்கள் மற்றும் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களின் மீதான சேவை வரியை நீக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஆவின் பொருட்கள் மற்றும் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் மீதான சேவை வரியை நீக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மையில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஐந்து விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கவும், நெய் மீது 12 விழுக்காடு வரி விதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த மாதம் 18-ஆம் தேதி முதல் மேற்படி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வின் காரணமாக ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, அனைத்துத் தரப்பினரும் இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், அண்மையில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேற்கோள் காட்டி, பொதுமக்கள் அன்றாடம் வாங்கும் பொருட்களான தயிர், மோர், நெய், லஸ்ஸி ஆகிய பொருட்கள் மீது பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை ஆவின் நிறுவனம் விதித்து இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நெய்யின் விலை 580 ரூபாயாகவும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை லிட்டர் பாக்கெட் தயிர் 35 ரூபாயாகவும், 200 கிராம் மோர் பாக்கெட் எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் இல்லாதபோது, எந்தப் பொருட்களின் மீது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டாலும், உடனடியாக குரல் எழுப்பி வந்த திமுக., ஆட்சிக்கு வந்த பிறகு பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பொருட்களுக்கு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஒப்புதல் அளித்து இருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது.

கரோனா தொற்றின் மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கின்ற இந்தச் சமயத்தில், சொத்து வரி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கின்ற நிலையில், மின் கட்டணம் உயர இருக்கின்ற நிலையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்கள் மீது ஐந்து விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை விதித்து இருப்பதும், இதன் அடிப்படையில் ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதும் ஏழையெளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். இவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, பொது மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், ஆவின் பொருட்கள் மீதான வரி உட்பட, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x