Published : 22 Jul 2022 11:55 AM
Last Updated : 22 Jul 2022 11:55 AM
சென்னை: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி மாநில ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,"உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருந்தார். அதேசமயம், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலினை செய்யப் போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த, தடயவியல் நிபுணர் சாந்தகுமார் தரப்பில் மாணவியின் மறு உடற்கூறாய்வு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
"இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வுகளுமே வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில், புதிதாக எதுவும் கண்டுபிடக்கப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதனை சரிபார்த்துக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, மனுதாரருக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பினார். அப்போது மாணவியின் தந்தை தரப்பில், " உடற்கூறாய்வு அறிக்கை திரிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, " மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் வீடியோப் பதிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்கு பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். உடலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சட்டப்படி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT