Published : 22 Jul 2022 05:45 AM
Last Updated : 22 Jul 2022 05:45 AM
சென்னை: காந்திய மக்கள் இயக்கம் இனி காமராஜர் மக்கள் இயக்கமாக செயல்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை. நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின்நிழல் கூடப் படியாத, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற காமராஜரின் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.
53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல், ஒழுக்கம் தவறாமல், அரசியலைப் பயன்படுத்தி ஒரு ரூபாய்கூட அறத்துக்குப் புறம்பாகச் சேர்க்காமல் காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான்.
நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப் போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது இமாலயத் தவறு என்றுஉணர்கிறேன். சுயநலமாக வாழமனசாட்சி அனுமதிக்கவில்லை. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று முழு அர்ப்பணிப்புடன் காமராஜர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய என்னை முற்றாக அர்ப்பணித்து விட்டேன்.
காமராஜர் ஆட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நடக்க, நான் உருவாக்கிய காந்திய மக்கள் இயக்கம், இன்றுமுதல் ‘காமராஜர் மக்கள் இயக்கம்' என்று பெயர் மாற்றம் பெறுகிறது.
அரசியல் களம் வன்முறைக் காடாகி விட்டது என்று கவலைப்படுபவர்கள், சகல தளங்களிலும் சிஸ்டம் சீரழிந்து விட்டது என்று சிந்திப்பவர்கள், மாற்று அரசியலை காணவேண்டும் என்று நினைப்பவர்கள், இனியும் பார்வையாளர்களாக இல்லாமல் வீட்டுக்கு ஒருவர் காமராஜர் மக்கள் இயக்கத்தில் இணைந்து செயலாற்ற அழைக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT