Published : 22 Jul 2022 07:06 AM
Last Updated : 22 Jul 2022 07:06 AM
காஞ்சிபுரம்: தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்க நாட்டுப்புறக் கலைஞர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மூலம் கலை பண்பாட்டுக் கொண்டாட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி பாரம்பரியக் கலைகளை பள்ளிகளில் கற்பிப்பதற்கான நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியது: தமிழகத்தில் வழக்கில் இருந்த பல கலை வடிவங்களை பாதுகாக்க பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு அவை குறித்து கற்பிக்க வேண்டியுள்ளது.
இதன்படி கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பன்னிசை, நாட்டுப்புறப்பாட்டு போன்றவை அரசுப் பள்ளி மாணவர்களிடம் எடுத்துச் செல்லப்படும்.
இதற்காக நாட்டுப்புறக் கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும். இதேபோல் சிலம்பம், மல்யுத்தம் முதலான தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளும் உரிய முறையில் கொண்டு சேர்க்க உரிய பயிற்சி அளிக்கப்படும். கலை கல்வியானது மாணவர்களிடம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.
இதற்காக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு கலை வடிவங்களை கற்பிக்க மாதிரி கால அட்டவணை உருவாக்கப்படும்.
கலைச் செயல்பாடுகளை பொறுத்தவரையில் மாதத்தின் 3-வது வாரத்தில் நாடகம், கூத்துக் கலைகளையும், நான்காவது வாரத்தில் இசை, வாய்ப்பாட்டு, நடனம், பாரம்பரிய கலைச் சார்ந்த செயல்பாடுகளையும் பள்ளிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
பயிற்சி பெறும் மாணவர்களில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பங்கேற்புடன் ஆண்டுதோறும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்படும்.
தேசிய அளவில் சென்ற ஆண்டு நடைபெற்ற கலைத் திருவிழாவில் தமிழக மாணவர்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி 7 கலை வடிவங்களில் பரிசு பெற்று தமிழகம் 2-ம் இடத்தை பிடிக்கச் செய்தனர். இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், ஆட்சியர் மா.ஆர்த்தி, எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment