Published : 22 Jul 2022 07:15 AM
Last Updated : 22 Jul 2022 07:15 AM
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் 362 ஏக்கர் பரப்பளவிலும், அதன் அருகே தத்தமஞ்சி கிராமத்தில் 252 ஏக்கர் பரப்பளவிலும் 2 ஏரிகள் உள்ளன.
நீர்வள ஆதாரத் துறையின் கீழ் உள்ள இந்த ஏரிகளுக்கு, மழைக் காலங்களில், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அணையின் உபரிநீர் மற்றும் மழைநீர், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டிலில் இருந்து கால்வாய் மூலமாக வருகிறது.
இந்நிலையில் காட்டூர், தத்தமஞ்சி ஆகிய ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், இரு ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நீர்வள ஆதாரத் துறையின் ஆரணி ஆறு வடிநில கோட்டம் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இப்பணி குறித்து, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: தமிழக அரசு முடிவின்படி, நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.49.36 கோடி மதிப்பில், காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து, நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
2022-ம் ஆண்டு ஜனவரியில் முடிக்கத் திட்டமிடப்பட்ட இப்பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது.
கூடுதலாக 58.27 மில்லியன் கன அடி நீரை சேமித்து, ஒட்டுமொத்தமாக 350 மில்லியன் கன அடியாக காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளின் கொள்ளளவை உயர்த்தும் வகையிலான இப்பணியில், காட்டூர் ஏரியில் 5.20 கி.மீ. மற்றும் தத்தமஞ்சி ஏரியில் 4 கி.மீ. என இவ்விரு ஏரிகளைச் சுற்றி, 9.20 கி.மீ. நீளத்துக்கு கரைகள் பலப்படுத்தும் பணி, இரு ஏரிகளில் 11 மதகுகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் என சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மீதமுள்ள 20 சதவீத பணிகள் வரும் செப்டம்பரில் முடிவுக்கு வந்து, புதிய நீர்த்தேக்கம் பயன்பாட்டுக்கு வரும்.
அவ்வாறு பயன்பாட்டுக்கு வரும்போது, காட்டூர், தத்தமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் பிரச்சினை தீரும். 5,804.38 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT