Published : 22 Jul 2022 06:34 AM
Last Updated : 22 Jul 2022 06:34 AM
சென்னை: இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் 'திருமணமாகாதவர்' என்ற சான்றிதழை சமர்ப்பித்தால் கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதிபெற இதுவரை இதர சான்றிதழ்களுடன் ‘முதல் திருமண சான்றும்' கோரப்பட்டு வந்தது.
தெளிவுரை வழங்கல்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது முதல்திருமண சான்றுக்கு பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் ‘திருமணமாகாதவர்' என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ள தெளிவுரை வழங்கிஉள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் கோயில்களில் திருமணம் நடத்தவிரும்பும் பொதுமக்கள் ‘திருமணமாகாதவர்' என சான்றிதழை இ-சேவை மையங்கள் மூலம்பெற்று சம்பந்தப்பட்ட கோயில்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து, கோயில்களின் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றிதழ்களை தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதர சான்றிதழ்களை கோரினால் 044-28339999 என்ற அறநிலையத் துறையின் தலைமை அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment