Published : 08 May 2016 12:42 PM
Last Updated : 08 May 2016 12:42 PM
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர். இவர் மதுரை மேற்குத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். பிரச்சார இடைவேளையில் ‘தி இந்து’வுக்கு உ.வாசுகி அளித்த சிறப்புப் பேட்டி:
அமைச்சர் செல்லூர் கே.ராஜுவை எதிர்த்து உங்களுக்கு வெற்றி வாய்ப்பு சாத்தியமா?
முதலமைச்சர் ஜெயலலிதாவே சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்ற வரலாறு உள்ளது. செல்லூர் கே.ராஜூ, கடந்தமுறை வெற்றிபெற்ற பிறகு ஒருமுறைகூட தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
தேடித்தேடி பார்த்தும் மூன்றாவது அணியைக் காணவில்லை என திமுக தலைவர் கருணாநிதி சொல்கிறாரே?
கருத்து திணிப்புகள் வந்த தெம்பில் அவர் பேசுகிறார். ஆணி அடிச்ச மாதிரி திமுக, அதிமுக மாறி மாறி இனி ஆட்சிக்கு வர முடியாது. திமுக, அதிமுகவை விட்டால் எதுவும் இல்லை என்ற வெற்றிடத்தை மக்கள் நலக் கூட்டணி நிரப்பிவிட்டது.
முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிறுத்தப்பட்டுள்ளதால், கம்யூனிஸ்டுகள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப் படுகிறதே?
முதல்வர் யார் என்பதைவிட, எந்த அடிப்படையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம் எனக் கருதினோம். முதல்வர் என்றால் அனைத்தும் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் அஸ்திவாரம் பலமாக இருக்கிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டப்படும் என்ற வாக்குறுதி சொல்லப்பட்டுள்ளதே?
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக நிலைபாட்டைத்தான் ஆதரித்தது. துரதிருஷ்டவசமாக கேரளாவைப் பொறுத்தவரையில், அங்குள்ள கட்சிகள் ஒட்டுமொத்தமாக அணை உடைந்தால் வீடுகள் மூழ்கும். மக்கள் உயிரிழப்பார்கள் என நினைக்கின்றனர். அதனால், ஒரே முடிவாக முல்லை பெரியாறு அணையை அவர்கள் எதிர்க்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
புதிய வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
25 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் நேர்மையைத்தான் எதிர்பார்க்கிறார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கட்சி, ஆட்சியை அவர் நடத்துகிற விதம் ஜனநாயகமாக இல்லை. அமைப்பு ரீதியாக கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதில்லை. அமைச்சர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட வாய்ப்பே கொடுக்கவில்லை. 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.
அரசியலில் பெண்களுக்கான வாய்ப்பு, உரிமைகள் முழுமையாக கிடைக்கிறதா?
சமூகம், அரசியல் இரண்டும் ஆணாதிக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதற்காக பெண்கள் அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கக் கூடாது. பெண்க ளுக்கு சம வாய்ப்பு கிடைக்க ஒரே தீர்வு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. இது நிறைவேற்றப் பட்டால், எல்லா கட்சிகளும் கண்டிப்பாக பெண்களுக்கு வாய்ப்பு அளித்துதான் தீர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT