Published : 21 Jul 2022 07:46 PM
Last Updated : 21 Jul 2022 07:46 PM

மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் Vs சென்னை மேயர் - அனல் பறந்த ஆய்வுக் கூட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், தினசரி குறையும் வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் - சென்னை மேயர் இடையே அனல் பறக்கும் கருத்துகள் பகிரப்பட்டன.

சென்னை மாநகராட்சி கல்வித் துறை நிர்வாகத்தின் கீழ் 281 சென்னைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேயர், துணை மேயர், துணை ஆணையர், தலைமை ஆசியர்கள் உள்ளிட்ட பலர் பேசிய கருத்தகளால் அனல் பறந்தது. இதன் விவரம்

ஆசிரியர்கள் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

“மாநகராட்சி பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

“வகுப்பறைகளில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.”

“உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.”

“காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

மேயர் பிரியா பேசியது:

“மாணவர்களின் தினசரி வருகை பதிவேடு மிகவும் குறைவாக உள்ளது. 400 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தினசரி 200 மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். இதை தடுக்க ஆசியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அனைத்து மாணவர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று தர வேண்டும்.

நான் ஆய்வு பணிகளில் ஈடுபடும்போது, ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் அங்கு இல்லை. அவரை நான் மொபைல் போனில் தொடர்பு கொண்டப்போதும், சக ஆசிரியர்கள் தொடர்பு கொண்டபோதும் அழைப்பை ஏற்கவில்லை. மேலும், பல நாட்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதும் தெரிய வந்தது. இதுபோல், எந்த ஆசிரியரும் இருக்க வேண்டாம்.

இவ்வாறு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால், பாரபட்சமின்றி சட்டப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

காலி பணியிடங்களை, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

50 சதவீத ஆசிரியர்கள் விரைந்து நிரப்பப்படுவார்கள்.

இனி வரும் காலங்களில் பள்ளிகளின் தேவை மற்றும் பிரச்சினை உள்ளிட்டவற்றை ஆராய அவ்வப்போது ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.“

துணை ஆணையர் சினேகா பேசியது:

“மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியும் பொது தேர்வில் குறைந்தப்பட்சம் 95 சதவீதம் விழுக்காடாவது வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை காட்ட வேண்டும்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x