Last Updated : 21 Jul, 2022 06:02 PM

 

Published : 21 Jul 2022 06:02 PM
Last Updated : 21 Jul 2022 06:02 PM

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகம் வழங்கப்படாமல் இல்லை: தமிழிசை விளக்கம்

ஆளுநர் தமிழிசை புதுச்சேரி கிருகம்பாக்கம் தொடக்கப் பள்ளியை பார்வையிட சென்றபோது கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்கும் பள்ளி மாணவர்கள்.

புதுச்சேரி: “மாணவர்கள் தினம் ஒரு சுதந்திர போராட்ட வீரர் பற்றி படித்து தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடை வழங்கப்படாமல் இருப்பது குறித்து குற்றச்சாட்டுக்கும் அவர் பதில் அளித்தார்.

இந்திய நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில முழுவதும் உள்ள 75 பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியை பார்வையிட்டார்.

பள்ளிக்கு வருகை புரிந்த தமிழிசை சவுந்தரராஜனை, மாறுவேடமிட்டு வந்த குழந்தைகள் பறை இசை முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், உரியடி, கும்மியாட்டம், கோலாட்டம், வில்லுப்பாட்டு ஆகியவற்றோடு வரவேற்றனர். உலக்கை குத்துதல், முறம் புடைத்தல், இயந்திரம் சுற்றுதல், அம்மி அரைத்தல் போன்ற கிராமிய பண்பாட்டு பழக்கங்களையும் நிகழ்த்திக் காட்டினர்.

மாணவர்களை படிக்கச் சொல்லிப் பார்த்த துணைநிலை ஆளுநர், மாணவர்களின் கலைத் திறமைகளையும், அறிவுத் திறனையும் வெகுவாகப் பாராட்டினார். அப்போது எம்எல்ஏ லட்சுமிகாந்தன் உடனிருந்தார். இதனைத் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆளுநர் சென்றார். அங்கும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஆளுநர், மாணவர்களோடு கலந்துரையாடினார்.

சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ன? என்பது குறித்து மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் தமிழிசை பதில் அளித்து பேசும்போது, ''சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு நிறைய இருக்கிறது. தில்லையாடி வள்ளியம்மை, கஸ்தூரிபாய் காந்தி, சரோஜினி நாயுடு உள்ளிட்ட பலர் பங்குபெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் பலர் பங்கெடுத்துள்ளனர்.

பாரதியாருக்கு அவரது துணைவியாரும் சுதந்திர போராட்டத்துக்கு உதவி புரிந்துள்ளார். மாணவர்கள் தினம் ஒரு சுதந்திர போராட்ட வீரரைப் பற்றி படித்து தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விக்கு தமிழிசை பதில் அளித்தார்.

இதன் பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் திட்டத்தின் கீழ் 75 பள்ளிகளை பார்வையிட்டு வருகிறோம். பள்ளிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை மேம்படுத்துவது குறித்தும் பார்த்து வருகிறோம். புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்திடும் வகையில் நமது முயற்சி இருக்கும்'' என்றார்.

அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை வழங்கப்படாமல் இருப்பது குறித்தும், மதிய உணவு தரமற்று இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் தமிழிசை, ''புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒன்று, இரண்டு பாடங்களுக்கு புத்தகங்கள் வரவில்லை. மற்ற பாடங்களுக்கு புத்தங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல், சீறுடையும் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் கொடுத்து விடுவார்கள். மாணவர்களுக்கான மதிய உணவை நான் சாப்பிட்டு பார்த்து குழந்தைகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தேன். மேலும், மதிய உணவு தொடர்பாக கருத்துக்கள் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நரம்பை அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை, அதிகமாக கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறைத்து மாணவர்கள் நிகழ்த்திய ஊமை நாடகத்தைக் கண்டு ஆசிரியர் ஆனந்த் மற்றும் மாணவர்களை பாராட்டினார். பிள்ளையார்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் நிகழ்த்தி காட்டிய பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொம்மலாட்டத்தை கண்டு ரசித்தார்.

அதனைத் தொடர்ந்து மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியைப் பார்வையிட்டார். தேசத் தலைவர்களைப் போலவும், விடுதலைப் போராட்ட வீரர்களை போலவும் மாறுவேடமிட்டு வரவேற்பு அளித்த மாணவர்களை ஆளுநர் பாராட்டினார். மாணவர்களின் கைவினைத் திறனைக் கண்டும், ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டுவந்த நாட்டு உணவுப் பொருள் காட்சியைப் பார்வையிட்டு பாராட்டினார். இதில் எம்எல்ஏ செந்தில்குமார் உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x