Published : 21 Jul 2022 05:31 PM
Last Updated : 21 Jul 2022 05:31 PM

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீண், பல கோடி ரூபாய் இழப்பு... என்ன செய்யப் போகிறது அரசு? - இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

சென்னை: “அலட்சியம், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, வீணான சுமார் 9 லட்சம் டன் அரிசிக்கு உண்டான பல கோடி ரூபாய் பண இழப்பிற்கு திமுக அரசு என்ன செய்யப்போகிறது” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து, தவ வாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா ஆட்சியிலும், ஜெயலலிதா நல்லாசியோடு செயல்பட்ட அதிமுக ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைப்பதும், ஜெயலலிதா பெயரால் நடைபெற்று வந்த பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவதையுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் திமுக ஆட்சியில், சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய், பாழாய் போனதாக மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாத காரணத்தால் அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் போவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நான், சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

அப்படி இருந்தும் இந்த ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தினார்கள்.அப்படியே நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிறது என்றும், அதனை உடனடியாக, முறையாக பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி நான் பலமுறை திமுக அரசிடம் எடுத்துக் கூறியும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்கத் தவறியதாலும், குறித்த நேரத்தில் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பாததாலும், பலகோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் இந்த அரசால் விரயமாக்கப்பட்டுள்ளது.

நான் இந்த அவலங்களை சுட்டிக்காட்டும் பொழுதெல்லாம், எனக்கு பதில் அளிப்பது என்ற போர்வையில் சால்ஜாப்பு வார்த்தைகளை சொல்லக் காட்டிய அக்கறையை, திமுக அரசின் உணவுத் துறை அமைச்சர், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பதில் காட்டவில்லை.

தன்னுடைய நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, தன்னுடைய ரத்தத்தை நெல் மணிகளாக விளைவித்து, இந்த அரசின் கைகளில் கொடுத்த அப்பாவி விவசாயிகள், தங்கள் உழைப்பை திமுக அரசு வீணடித்துவிட்டதே என்று எண்ணி எண்ணி ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். திமுக அரசின் முதல்வர், கடந்த மாதம் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, பெண்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட புழுத்த அரிசியை அவரிடம் காட்டி கோஷமிட்டனர்.

மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் இல்லாமல், உண்ண முடியாத நிலையில் இருப்பதால், வெகுண்டெழுந்த மக்கள் மத்திய அரசுக்கு அனுப்பிய புகார்களின் அடிப்படையில், இந்திய வாணிபக் கழக அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான குடோன்களில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் மூலம் சுமார் 9 லட்சம் டன், அதாவது சுமார் 92 கோடி கிலோ அரிசி மக்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்களிலும், இன்றைய நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது, கால்நடைகள் கூட உண்ண முடியாத தரமில்லாத இந்த அரிசியை, ரேஷன் கடைகள் மூலம் அப்பாவி மக்களின் தலையில் கட்ட திமுக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தொட்டதற்கெல்லாம் மத்திய அரசை குறை சொல்வதும், அத்தியாவசியப் பொருட்கள், சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் போன்றவற்றை தன்னிச்சையாக உயர்த்தும்போது, மத்திய அரசு ஆணையிட்டதால் தான் உயர்த்தினோம் என்று கூறி, கண்ணாம்மூச்சி ஆட்டம் காட்டும் திமுக அரசு, மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் புழுத்துப் பாழாய் போன அரிசியைப் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் அளிக்கப்போகிறது?

கோடிக்கணக்கான கிலோ அரிசி பாழாய் போனதற்கு திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? திமுக அரசின் அலட்சியம், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, சுமார் 9 லட்சம் டன் அரிசிக்கு உண்டான பல கோடி ரூபாய் பண இழப்பை திமுக அரசு என்ன செய்யப் போகிறது? இதே போன்று, தமிழகம் முழுவதும் எத்தனை லட்சம் டன் அரிசி வீணாகி உள்ளது என்பதையும் இந்திய உணவுக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x