Last Updated : 21 Jul, 2022 05:08 PM

1  

Published : 21 Jul 2022 05:08 PM
Last Updated : 21 Jul 2022 05:08 PM

திருச்சியில் அமைச்சர்களின் ஆதரவாளர்களால் சூடுபிடிக்கும் திமுக உட்கட்சி தேர்தல்: நடப்பது என்ன?

திருச்சி: திருச்சி மாநகரச் செயலாளர் பதவியை குறிவைத்து திருச்சி மாநகர திமுகவின் பகுதிகள் சீரமைப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆதரவாளர்களின் அடுத்தடுத்த காய்நகர்த்தலால், உட்கட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது.

இதற்கு கட்டியம் கூறும் வகையில் கட்சித் தலைமையும் பகுதி கழகம் குறித்து திருத்தத்துக்கு மேல் திருத்தம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்ட திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாநகர திமுக ஒரே அமைப்பாக இருந்தது.

அதன்பின் வடக்கு, தெற்கு, மத்திய என 3 ஆக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டபோது மாந கரிலுள்ள 65 வார்டுகளில் 36 வார்டுகள் தெற்கு மாவட்டத்திலும், 29 வார்டுகள் மத்திய மாவட்டத்தின்கீழும் கொண்டு வரப்பட்டன. அதன்பின்னர், மாநகர திமுக அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இருந்தபோதும், செயல்பாடுகள் ரீதியாக மத்திய, தெற்கு என 2 பிரிவுகளாகவே இருந்து வருகிறது.

திருச்சி மாநகரமேயராக உள்ள அன்பழகன் தற்போது மாநகரச் செயலாளராகவும் உள்ளார்.இந்தச் சூழலில் திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தலுக்காக மாநகர திமுக வில் பகுதி சீரமைப்பு மேற்கொள்ள கட்சித் தலைமை அனுமதி வழங்கியது. அதன்படி, அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கட்சித் தலைமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மத்திய மாவட்ட திமுகவில் ஏற்கெனவே இருந்த 5 பகுதிகள் அப்படியே தொடர்ந்தன. தெற்கு மாவட்ட திமுகவில் ஏற்கெனவே இருந்த 5 பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிதாக மார்க்கெட் பகுதி உருவாக்கப்பட்டது.

இதன்மூலம் மாநகர திமுகவில் மத்திய மாவட்டத்துக்கு 5, தெற்கு மாவட்டத்துக்கு 6 என மொத்தம் 11 பகுதிகள் இருந்தன. மாநகரச் செயலாளர் மற்றும் மாநகர திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தால், அதில் பகுதி நிர்வாகிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற நிலை உள்ளது. எனவே, தெற்கு மாவட்டத்தில் உள்ளதுபோல, மத்திய மாவட்டத்திலும் 6 பகுதிகள் இருக்கும் வகையில், ஸ்ரீரங்கம் பகுதியை இரண்டாக பிரித்து புதிதாக திருவானைக்காவல் பகுதியை உருவாக்கி கட்சித் தலைமை மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து, பகுதி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான உட்கட்சித் தேர்தல் ஜூலை 22-ம் தேதி முதல் 24-ம் தேதிக்குள் நடத்தப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக தெற்கு மாவட்டத்திலுள்ள 6 பகுதிகளில் இருந்து சில வார்டுகளை பிரித்து புதிதாக திருவெறும்பூர் பகுதியை உருவாக்கி, நேற்று முன்தினம் மற்றொரு திருத்த அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டது. இதன்மூலம் தற்போது தெற்கு மாவட்டத்தில் 7, மத்திய மாவட்டத்தில் 6 என்ற அடிப்படையில் பகுதிகள் அமைந்துள்ளன. பகுதி சீரமைப்பு தொடர்பாக அடுத்தடுத்து வரக்கூடிய திருத்த அறிவிப்புகள் திமுகவினரிடம் குழப்பம் ஏற்படும் வகையில் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் மாநகரச் செயலாளர் தேர்தல் குறித்த விவாதத்தையும் கட்சியினரிடம் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘‘கட்சி நிர்வாக வசதிக்காக பகுதிகள் பிரிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் திருச்சி மாநகர திமுக அமைப்புத் தேர்தல் காரணமாக இருக்கிறது.ஒருவேளை மாநகரச் செயலாளர் பதவிக்கு தேர்தல் வந்தால், அதில் அதிக வார்டுகளை வைத்திருக்கக்கூடிய தெற்கு மாவட்டத்திலிருந்து ஒருவரை மாநகரச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப் பாளரான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பினர் விரும்புகின்றனர்.

எனவேதான் தலா 5 என்ற அடிப்படையில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்து, தங்களுக்கு 6 ஆக கொண்டு வந்தனர். அதன்பின் சுதாரித்துக் கொண்ட மத்திய மாவட்ட திமுகவினரும் உடனடியாக திருத்தம் கொண்டு வரச்செய்து தங்களது பகுதியையும் 6 ஆக அதிகரிக்கச் செய்தனர். இதன்மூலம் இருவரும் சமபலத்தில் இருந்ததால், மாநகர திமுகவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆதரவாளர்களில் யார் கை ஓங்கும் என கணிக்க முடியாத சூழல் இருந்தது.

ஆனால், திடீர் திருப்பமாக தெற்கு மாவட்ட திமுகவில் கூடுதலாக ஒரு பகுதியை உருவாக்கி, தற்போது மீண்டும் திருத்த அறிவிப்பை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. இதற்கு அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களாக உள்ள மத்திய மாவட்ட திமுகவினர் அடுத்து என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை'’ என்றனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘தற்போதுள்ள சூழலில் மாநகராட்சியிலுள்ள 65 வார்டுகளையும், மாநகர திமுக என்ற ஒரே நிர்வாக அமைப்பின் கீழ் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. தெற்கு, மத்திய மாவட்டங்களில் உள்ள இரு அமைச் சர்களின் ஆதரவாளர்களாக உள்ள நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பில்லை. எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி மாநகர திமுக(தெற்கு), திருச்சி மாநகர திமுக (மத்திய) என உருவாக்கப்பட்டு, 2 மாநகர செயலாளர்கள் நியமிக்கப்படலாம். அல்லது ஒருவரே மாநகரச் செய லாளராக இருக்கலாம்'’ என்றனர்.

தலைமை முடிவு செய்யும் திமுக நிர்வாகிகள் மேலும் கூறும்போது, “மாநகர திமுகவில் ஆதிக்கம் செலுத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்களுமே ஆர்வமாக உள்ளனர். மாநகராட்சி மேயர் தேர்தலின்போது இது அப்பட்டமாக வெளிப்பட்டது. கே.என்.நேரு தரப்பில் ஆரம்பத்திலிருந்தே மு.அன்பழகன் மேயர் வேட்பாளராக முன்வைக்கப்பட்டார். அமைச்சர் மகேஸ் தரப்பில் ஆரம்பத்தில் பகுதி செயலாளர் மதிவாணன், அதன்பின் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் என மாறி மாறி முன் நிறுத்தப்பட்டனர்.

இறுதியில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பின் கை ஓங்கியது. மு.அன்பழகன் மேயரானார். இந்தச் சூழலில் மேயர் பதவி கைவிட்டு போன நிலையில், வரக்கூடிய உட்கட்சி தேர்தலில் திருச்சி மாநகரச் செயலாளர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். அதேபோல, தற்போது மத்திய மாவட்டத்திடம் உள்ள மாநகரச் செயலாளர் பதவியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்பதில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களும் முழுமுனைப்பில் உள்ளனர். இறுதியில் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x