Published : 21 Jul 2022 03:42 PM
Last Updated : 21 Jul 2022 03:42 PM

இறுதிக் கட்டத்தில் பெரம்பலூர் - துறையூர் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணி: 5 மாதங்களுக்கு முன்னரே பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிரம்

ரூ.143.83 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திட்டமிடப்பட்ட காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பேபணிகளை முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை- கன்னியாகுமரி தொழில்தட சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம் 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 30.057 கி.மீ தொலைவு கொண்ட இச்சாலையை விரிவாக்கம் செய்ய ரூ.150 கோடிக்கு திட்டம் தயார் செய்யப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள உரிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடப்பட்டு, 27.1.2021 அன்று ரூ.143.83 கோடிக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது.

அப்போது, பணியை உடனே தொடங்கி, 2 ஆண்டுகளுக்குள் முடித்து, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என டெண்டர் எடுத்த தனியார் நிறுவனத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, டெண்டர் இறுதி செய்யப்பட்ட இரண்டே வாரங்களில், அதாவது 10.2.2021 அன்று சாலை அமைக்கும் பணிகள்தொடங்கின. இதன்படி, 9.2.2023 அன்றுசாலை விரிவாக்கப் பணிகளை ஒப்பந்ததாரர் முடித்து, நெடுஞ்சாலைத் துறையிடம்ஒப்படைக்க வேண்டும். அதன்படி, முழுவீச்சில் நடைபெற்று வந்த சாலை அமைக்கும் பணி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தது:

"7 மீட்டர் அகலம் கொண்ட பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலை 10 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தி, விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையோரம் உள்ள பேருந்து நிறுத்தம், கல்வி நிலையங்கள், அணுகு சாலைகள் சேரும் இடங்கள் ஆகிய பகுதிகளில், அந்தந்தப் பகுதியின் தேவைக்கேற்ப சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாலையை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் அநாவசியமாக சாலையைப் பயன்படுத்துவதை தடுக்கும்விதமாகவும், விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் விதமாகவும் நடைபாதை வடிவில் மூடப்பட்ட மழைநீர் வடிகால்கள் மற்றும் இரும்பு கிரில்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தச் சாலை செல்லும் வழிகளான நக்கசேலம் மற்றும் குரும்பலூர் கிராமங்களில் மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக இருப்பதால், புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்தஊருக்குள் செல்லாமல், புறவழிச்சாலை வழியாக யாருக்கும் இடையூறின்றி கடந்துசெல்ல முடியும். இந்தச் சாலையில் 12 சிறுபாலங்களும், 53 குறுபாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 909 மரங்கள் வெட்டப்பட்டன. சுற்றுச்சூழல் விதிகளின்படி வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக, 9,090 மரங்கள் நடப்பட வேண்டும்.

இதில், இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சாலையோரங்களில் ஏற்கெனவே நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள மரங்களையும் விரைவில் நட்டு வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்தச் சாலை அமையும் வழித்தடத்தில் ஒரே ஒரு இடத்தில் 4,076 ச.மீ நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அந்த இடத்தில் மட்டும் சாலை விரிவாக்கம் செய்ய முடியாமல் உள்ளது. அந்த வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைப் பணிகளை அதிகாரிகள் குழு தொடர்ந்து ஆய்வு செய்து, விரைந்து முடிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சாலைகளில் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்கள், மின் விளக்குகள், இரும்பு கிரில்கள் அமைத்தல், தார் சாலை அமைத்தல் போன்ற இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த சாலை திட்டம் குறிப்பிட்ட காலத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பே, அதாவது செப்டம்பர் மாதமே நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x