Published : 21 Jul 2022 03:27 PM
Last Updated : 21 Jul 2022 03:27 PM
சென்னை: கருமுட்டை விற்பனை விவகாரத்தில் வெளி மாநிலங்களில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு தொடர்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், கருத்தரிப்பு தொழில்நுட்ப சட்டம் 2021 மற்றும் வாடகைத் தாய் சட்டம் தொடர்பாக இணை இயக்குநர்களுக்கான கருத்தரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் செயற்கை கருத்தரித்தல் மையம், அவை குறித்தான எதிர்கால நடவடிக்கைகளை வலுப்படுத்துகின்ற வகையிலும், செயற்கை கருத்தரித்தல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகளை தடுக்கும் சட்ட நடவடிக்கை, தொடர் கண்காணிப்பு, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழகத்தில் நான்கு செயற்கை கருத்தரித்தல் மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள், சட்டமீறல்கள், விதிமீறல்கள் பற்றி தெளிவாக விளக்கி சொல்லப்பட்டு அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில் சேலம் மற்றும் ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனைகள் பெருந்துறையில் உள்ள இராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர்கள் சீல் வைக்கப்பட்டன. அதேபோல் ஈரோடு சுதா மருத்துவமனை மற்றும் பெருந்துறை இராம்பிரசாத் ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
ஏற்கெனவே காப்பீடு திட்டத்தை அமல்படுத்திக்கொண்டிருக்கிற ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த 4 மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரித்தலுக்காக மருத்துவம் பார்க்கின்ற 4 சிறப்பு மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 190 இடங்களில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த 190 மருத்துவமனைகளுக்கும் பொதுவான விதிமுறைகள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள 3 சட்டங்கள்படி எந்த மாதிரியான நடவடிக்கைகளை இந்த மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும், எந்தமாதிரியான விதிமுறைகள் அவர்கள் தொடர வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகள் மற்றும் சட்டகுறிப்புகளை உள்ளடக்கிய பொதுவான அறிவிப்புகள் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களிடம் தரப்பட்டது.
திருப்பதியில் இருக்கின்ற ஒரு மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற மற்றொரு மருத்துவமனையும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, அந்த இரு மருத்துவமனைகளை பற்றி தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் மூலம் அந்தந்த மாநில அரசின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு அந்த மருத்துவமனைகள் மேற்கொண்ட விதிமீறல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment