Published : 21 Jul 2022 03:23 PM
Last Updated : 21 Jul 2022 03:23 PM
சென்னை: "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதோடு தற்போது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், மோர், லஸ்ஸி, ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது.
மேலும், ரூ.1000 மதிப்புள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதமும், சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கு 5 முதல் 12 சதவீதமும், எல்இடி பல்புகளுக்கான வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை அறை வாடகை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் விவசாய கருவிகள் என பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தியிருப்பது ஏற்புடையது அல்ல.
ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்காமல் மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, மின் கட்டணம், வீட்டு வாடகை உயர்வு என்று தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் வராமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதோடு தற்போது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...