Published : 21 Jul 2022 01:01 PM
Last Updated : 21 Jul 2022 01:01 PM
புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மாணவியின் மறு பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு பரிந்துரை செய்யும் மருத்துவர் குழு கொண்டு நடத்த உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மர்ம மரணம் அடைந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தங்கள் தரப்பு மருத்துவக் குழு மூலம் மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற மாணவியின் தந்தை முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மாணவியின் தந்தை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளபோது மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது மாணவியின் தந்தை தரப்பில், "நேற்று நடைபெற்ற மறு பிரேத பரிசோதனை மாணவின் பெற்றோர் இல்லாமல் நடந்துள்ளது.அது தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே, தங்கள் தரப்பு மருத்துவ குழு மூலம் மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், "மறுபிரேத பரிசோதனை மாலை 4 மணியளவில் நடைபெற்றது. ஆனால், உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு பகல் 12.23 மணியளவில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. உரிய கால நேரம் இருந்தும் அவர்கள் மறுபிரேத பரிசோதனைக்கு வரவில்லை.
மறுபிரேத பரிசோதனை தொடர்பான அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை மனுதாரர் தரப்பு தவறாக வழிநடத்துகிறார். மேலும் மீண்டும் கலவரம் ஏதேனும் நடந்துவிடக் கூடாது என்பதில் அரசும், காவல்துறையும் கவனமாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசு அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, மாணவியின் தந்தை தரப்பில், "மறு பிரேத பரிசோதனையின்போது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தங்கள் தரப்பு வல்லுனர் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதிகள் "இந்த கோரிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றத்திடம் வைக்கலாம்" என தெரிவித்ததோடு, மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக கூறினர்.
அப்போது மாணவியின் தந்தை தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மனுவை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், "இந்த விவகாரம் தொடர்பாக இனி எந்தவொரு கோரிக்கை என்றாலும் ஏற்கெனவே வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும்" என அறிவுறுத்தினர்.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், "சட்டம் - ஒழுங்கு காரணத்துக்காக மாணவியின் உடலை இதற்குமேல் தாமதிக்காமல் நல்லடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், "உடலை நல்லடக்கம் செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுக்கும்" என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT