Published : 21 Jul 2022 04:50 AM
Last Updated : 21 Jul 2022 04:50 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வீட்டில் நேற்று ஆய்வு மேற்கொள்ள வந்த பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்.

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வீடு, அலுவலகத்தில் நேற்று பொதுப்பணி, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் கடந்த ஆண்டு நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளதா என்பது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்எல்ஏவுமான பி.தங்கமணியின் வீடு உள்ளது. அவர் 2016 முதல் 2021 வரை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தங்கமணி(60), அவரது மனைவி டி.சாந்தி (56), மகன் டி.தரணிதரன் (32) ஆகியோர் மீது கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

2021 டிசம்பர் 15-ம் தேதி தங்கமணியின் வீடு உட்பட 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளதா என்றும், அவற்றின் மதிப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள நேற்று கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டுக்கு பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது தங்கமணி வீட்டில் இருந்தார்.

அவரது வீடு, பள்ளிபாளையத்தில் உள்ள ஜவுளி அலுவலகம், சாயப்பட்டறை உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். காலையில் தொடங்கிய ஆய்வு, மாலை 4 மணிக்கு முடி வடைந்தது.

இதுகுறித்து தங்கமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்ததன் அடிப்படையில், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தை அளவீடு செய்யவும், மதிப்பீடு செய்யவும் பொதுப்பணி, லஞ்ச ஒழிப்பு மற்றும் வருவாய்த் துறையினர் வந்தனர்.

எனது தொழிற்சாலை, நான் பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.

அதிமுக தலைமை அலுவலகத்தை திறக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து கேட்கிறீர்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். ஓபிஸ் தரப்பு நீதிமன்றம் உட்பட எங்கு சென்றாலும், நியாயம்தான் ஜெயிக்கும். மின் கட்டண உயர்வு குறித்து, பிறகு விரிவான தகவல் தருகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x