Published : 21 Jul 2022 05:24 AM
Last Updated : 21 Jul 2022 05:24 AM

அதிமுக தலைமை அலுவலக சாவி இபிஎஸ் வசம் - உயர் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ் தரப்பு

சென்னை: சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, இபிஎஸ் வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு தொண்டர்களை கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ்-இபிஎஸ் இரு தரப்பிலும் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பு விவரம்:

பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களாகப் பதவி வகித்தவர்கள். ஆனால், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்துள்ளது.

பழனிசாமி தரப்பு கட்சி அலுவலகத்தின் கதவுகளை பூட்டிக்கொண்டு, தங்களை உள்ளேவிட மறுத்ததால்தான் பிரச்சினை ஏற்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் தரப்பு செல்லும்வரை, போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலவரத்துக்குப் பிறகே போலீஸார் லேசான தடியடி நடத்தியுள்ளனர்.

வீடியோ ஆதாரங்களைப் பார்க்கும்போது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றதும், அவரது ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டும், கற்களை வீசியும் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இதுபோல அவர் செயல்பட்டு இருக்கக்கூடாது. அதேபோல, பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்துக்குள் அனுமதித்து இருக்கக்கூடாது. இருவருமே சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளனர். அதேநேரம், போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரம் நடந்திருக்காது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தலைமை உள்ளிட்ட தீர்மானங்கள், கட்சியின் பெரும்பான்மையினர் எடுத்த முடிவு. அவற்றை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாதவரை, அந்த முடிவே மேலோங்கி நிற்கும். தற்போதைய சூழலில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி அலுவலகம் மீதான சுவாதீன உரிமையைக் கோர முடியாது.

இது அலுவலகம் தொடர்பான சொத்தின் சுவாதீனம் சம்பந்தப்பட்டதா, இல்லையா என்பதை கோட்டாட்சியர் குறிப்பிடவில்லை. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவே சீல் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கோட்டாட்சியர் முழுமனதுடன் இந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.

ஜூலை 11-ம் தேதிக்கு முன் அலுவலகத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது, அந்த அலுவலகம் ஓபிஎஸ் வசம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. கட்சி அலுவலகம் பழனிசாமி தரப்பில் இருந்துள்ளதை போலீஸாரின் அறிக்கையும் தெளிவுபடுத்துகிறது.

ஓபிஎஸ் தரப்பு கதவை உடைத்துக்கொண்டு சென்றதை, அத்துமீறிய செயலாகத்தான் பார்க்க வேண்டும். 1988-ல் இதுபோன்ற சூழலில், கட்சி அலுவலகம் சீல் வைப்பதற்கு 3 நாட்களுக்கு முன் அது ஜானகி ராமச்சந்திரனிடம் இருந்ததால், பிறகு அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. எனவே, அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியை உடனடியாக பழனிசாமி வசம் கோட்டாட்சியர் ஒப்படைக்க வேண்டும். அந்த அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேநேரம், தற்போதுள்ள சூழலைக் கருத்தில்கொண்டு, கட்சி அலுவலகம் வர தொண்டர்களையோ அல்லது தனது ஆதரவாளர்களையோ பழனிசாமி ஒரு மாதத்துக்கு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேல்முறையீடு செய்யப்படும்

இதற்கிடையில், “குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் கட்சி அலுவலக சுவாதீனம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனி நீதிபதிக்கு இல்லை. கோட்டாட்சியர் மற்றும் சிவில் நீதிமன்ற அதிகாரத்தைக் கையில் எடுத்து தனி நீதிபதி இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளார். எனவே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்” என பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் சி.திருமாறன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x