Published : 21 Jul 2022 07:41 AM
Last Updated : 21 Jul 2022 07:41 AM
சென்னை: மாணவர்களின் நலன் கருதி தற்கொலை தடுப்பு படையை அமைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ம் தேதி மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த சில நாட்களில் உயிர்க்கொல்லி நீட் என்னும் அநீதியால் 3 மாணவர்கள் தற்கொலை, மேச்சேரி அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று கால் முறிந்து சிகிச்சை பெறுகிறார் எனபல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை நம் பிள்ளைகள் இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
எனவே, பெற்றோர் அனைவரும் பிள்ளைகளிடம் எதிர்காலம் பற்றிய அச்சத்தை விதைத்துக் கொண்டே இருப்பது, மிதமிஞ்சிய கண்டிப்பு போன்றவற்றை கைவிட்டு, ஒரு நண்பனைப்போல பழகுங்கள். நாட்டில் எதிர்பார்க்கும் ஜனநாயகத்தை வீட்டிலும் நிலவச் செய்யுங்கள்.
ஆசிரியர்களே, உங்களிடம் தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையை மாணவ மனங்களில் விதையுங்கள்.
மாணவர்களின் நலன் கருதி, தற்கொலை தடுப்பு படையை அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும். அதன்மூலம் மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT