Published : 05 May 2016 02:06 PM
Last Updated : 05 May 2016 02:06 PM
தமாகா வேட்பாளர்கள் தம் சின்னத்தை அறிமுகப்படுத்த தென்னை மர நாற்றுக்களை வேன்களில் ஏற்றிக்கொண்டு பிரச்சாரம் செய்வது நிறைய நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தமாகா வேட்பாளர் மகேஸ்வரி, கொஞ்சம் வித்தியாசமாக தென்னை மரக் கன்றுகளை மாட்டுவண்டியில் எடுத்துச்சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதியின் பெரும் பகுதிகள் கிராமங்களை உள்ளடக்கியவை ஆகும். இத்தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
தமாகா வேட்பாளர் மகேஸ்வரி உள்ளிட்ட வேட்பாளர்கள் பிரச் சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வழக்கமான ஊழியர் கூட்டங்கள், சார்பு அமைப்பு கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரம், ஆட்டோ பிரச்சாரம், வீடு வீடாகப் பிரச்சாரம், நட்சத்திரப் பேச்சாளர்கள் உரை, துண்டறிக்கைகள் என அதிமுகவினர் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
திமுகவினர் தேர்தல் அறிக்கையை ஒரு கையிலும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன் பெற்றவர்களின் பட்டியலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, அவர்களின் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து ஆட்சிக்கு வந்தால் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதை எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், மக்கள் நலக்கூட்டணியுடன் கை கோர்க்கும் தமாகா வேட்பாளர் மகேஸ்வரி மாட்டுவண்டியில், ‘தென்னை மரக் கன்றுகளை’ ஏற்றிக் கொண்டு ‘தென்னை மரம்’ சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக வலம் வருகிறார்.
இதுகுறித்து மகேஸ்வரி கூறும்போது, ‘தொகுதியில் பிரச்சாரத்துக்கு சென்றபோது பல கிராமங்களில் அடிப்படை வசதிகளே இல்லை என்பது தெரிய வந்தது. பிரச்சார வேனை தவிர்த்து ஒரு சில கிராமங்களில் மட்டுமே மாட்டுவண்டியில் பிரச்சாரம் செய்ய முடிந்தது. ஏனெனில் ஒவ்வொரு கிராமமும் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. மாட்டுவண்டியில் பிரச்சாரம் செய்ததன் மூலம் கட்சிக்கு புதிதாக கிடைத்துள்ள சின்னம் மக்கள் மனதில் பதிய வைக்கவும், எளிதாக அவர்களை அணுகவும் முடிகிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT