Published : 21 Jul 2022 06:17 AM
Last Updated : 21 Jul 2022 06:17 AM

ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புகள் தமிழகத்தில் ஜூலை 23 முதல் கல்விக் கண்காட்சி

சென்னை: ரஷ்யாவில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகள் தொடர்பான கல்விக் கண்காட்சி தமிழகத்தில் வரும் 23 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் (ஆர்சிஎஸ்சி), ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட் நிறுவனம் (எஸ்ஏஇசி) இணைந்து ஆண்டுதோறும் இக்கண்காட்சியை நடத்தி வருகின்றன. அதன்படி, வரும் 23 முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னையில் நேற்று தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் லாகுடின் செர்ஜி அலெக்ஸிவிச், எஸ்ஏஇசி நிறுவன மேலாண்மை இயக்குநர் சி.ரவிசந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஷ்யாவில் வரும் செப். மாதம் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை ஆர்சிஎஸ்சி மையத்தில் வரும் 23, 24-ம் தேதிகளில் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

தொடர்ந்து, கோவையில் வரும் 26-ம் தேதியும், மதுரையில் 28, திருச்சியில் 29-ம் தேதிகளிலும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் இலவசமாகப் பங்கேற்று, ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்வதுடன், தங்கள் பெயரை சேர்க்கைக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 92822 21221/ 9940199883 எண்களில் தொடர்புகொள்ளலாம்.

ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பல்கலைக்கழகங்களைப் பொறுத்து, கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.2.8 லட்சம்முதல் 4.8 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வாய்ப்பு

போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தொடர முடியாத இந்தியமாணவர்களுக்கு, சிறப்பு வாய்ப்புவழங்க ரஷ்ய அரசு முன்வந்துள்ளது. இதற்காக ரஷ்யாவின் அரசு பல்கலை.களில் சுமார் 2,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்யாவின் வோல்கோகிராட் ஸ்டேட் மருத்துவப் பல்கலை. துணை முதல்வர் டெனிஸ் விக்டோரோவிச், இன்பே தேசிய அணு ஆய்வு பல்கலை. பேராசிரியர் எகடெரினா செர்ஜீவ்னா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x