Published : 20 Jul 2022 04:56 AM
Last Updated : 20 Jul 2022 04:56 AM
சென்னை: காவல் துறை அலுவலக பயன்பாட்டுக்கான வாகனங்களில் மட்டுமே ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். காவலர்கள் தங்கள் தனிப்பட்டவாகனங்களில் அவ்வாறு ஒட்டியிருந்தால் உடனே அதை அகற்றவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. ‘காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் கண்ணாடிகளிலும் கருப்பு ஃபிலிம் ஒட்டக் கூடாது. காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் ‘போலீஸ்’ என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, காவல் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களது அலுவலக வாகன கண்ணாடிகளில் கருப்பு ஃபிலிம் ஒட்டக் கூடாது. காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்கான வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற போர்டு, ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது. அலுவலக பயன்பாட்டுக்கான வாகனங்களில் மட்டுமே அவ்வாறு பயன்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் துறை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள்கீழ் பணிபுரியும் காவலர்கள், தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்டு, ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அதை அகற்ற அறிவுறுத்த வேண்டும். இதை கண்டிப்பாக பின்பற்றுவதோடு, இந்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT