Published : 19 Jul 2022 08:06 PM
Last Updated : 19 Jul 2022 08:06 PM
சென்னை: தமிழ்நாடுநாள் விழாவை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை 24-ம் தேதி வரை பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விழா வரும் கடந்த 18-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதனையொட்டி கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சென்னையில் முதன்முறையாக தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தமிழகத்தில் வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், சுடுமண் குழாய்கள், கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், பவள மணிகள், தங்க நாணயங்கள், வெள்ளி முத்திரைகள், ஈமச்சடங்கு மட்கலன்கள், உறை கிணறு, போன்றவை பொதுமக்களின் பார்வைக்காகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரைபட கண்காட்சியில் சென்னை மாகாணத்தின் பழைய வரைபடங்கள் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், சென்னை மாநில வரைபடம் முதல் தற்போதைய தமிழ்நாடு மாநில வரைபடங்கள் வரையிலான அரிய வகைப் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த சிறப்புக் கண்காட்சி வரும் 24-ம் தேதி வரை நீட்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT