Published : 19 Jul 2022 05:46 PM
Last Updated : 19 Jul 2022 05:46 PM
திருச்சி: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 1.33 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி, வறண்டு கிடக்கும் ஏரிகள், குளங்களை நிரப்ப நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேட்டூர் அணையில் ஜூலை 10-ம் தேதி நீர்மட்டம் 98 அடியாகவும், நீர்வரத்து 3,458 கன அடியாக இருந்தது. கர்நாடக மாநிலத்தில் காவிரிநீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஜூலை 11-ம் தேதி 13 ஆயிரம் கன அடியாகவும், 12-ம் தேதி 90 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை 16-ம் தேதிஎட்டியது.
இதைத் தொடர்ந்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 17-ம் தேதி 1.29 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இது மேலும் அதிகரித்து நேற்று 1.33 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து, நேற்று மாலை முக்கொம்புக்கு 1,22,295 கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால், முக்கொம்பிலிருந்து காவிரி ஆற்றில் 49 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் வடக்குப்பிரிவில் 17,461 கன அடி, தெற்கு பிரிவில் 55,878 கன அடிஎன கொள்ளிடம் ஆற்றில் மட்டும்73,339 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையிலிருந்து நேற்று காவிரியில் 7,505 கன அடியும், வெண்ணாற்றில் 9,008 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,804 கன அடியும், கொள்ளிடத்தில் 28,480 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், இந்த தண்ணீர் வீணாக கடலில் சென்று சேருவதைத் தடுத்து, ஆறுகளின் இருபுறங்களிலும் உள்ள ஏரிகள், குளங்களுக்கு கொண்டு சென்று நிரப்ப நீர்வளத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது, “காவிரியில் அதிக அளவில் வரும் தண்ணீரை அனைத்து ஆறுகளிலும் முழு அளவுக்கு திறந்து கடைமடை வரை கொண்டு செல்ல வேண்டும். ஆறுகளில் வரும் தண்ணீரை அதையொட்டி உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் முழுவதுமாக நிரப்ப வேண்டும். தற்போது,காவிரி, கொள்ளிடம் கரைகளையொட்டி உள்ள நீர்நிலைகள்கூட வறண்டு கிடக்கின்றன.
இவற்றை நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, இவற்றை நிரப்ப நீர்வளத் துறையினர் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இதுகுறித்து நீர்வளத் துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) நித்யானந்தம் கூறும்போது, ‘‘தற்போது அதிக அளவில் வரும் தண்ணீர் காவிரியின் அனைத்து கிளை ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றுக்கு அனுப்பப்படுகிறது. அந்தந்த ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் ஏரிகள், குளங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT