Published : 19 Jul 2022 02:50 PM
Last Updated : 19 Jul 2022 02:50 PM

அதிமுக கொறடா வேலுமணி கடிதம்; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவைத் தலைவர் அப்பாவு

திருநெல்வேலி: "அதிமுக கொறடா வேலுமணி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் என்ற அடிப்படையில், ஜனநாயக வழியில் சட்டப்படி விதிப்படி நியாயமாக ஒருதலைபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் நியமனம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியது: "எதிர்க்கட்சி கொறடா வேலுமணி சென்னையில் உள்ள எனது உதவியாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர்கள் கூறுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் அந்த கடிதத்தை படித்துப் பார்க்கவில்லை.

கடந்த வாரம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது. அதேபோல், கொறடா கொடுத்துள்ள கடிதத்தையும் படித்துப் பார்த்து பரிசீலனை செய்து, சட்டப்பேரவைத் தலைவர் என்ற அடிப்படையில், ஜனநாயக வழியில் சட்டப்படி விதிப்படி நியாயமாக ஒருதலைபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி ஜனநாயகப்படிதான் இந்த ஆட்சி நடக்கிறது. தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு எங்களுக்கு கிடையாது.

66 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். யார் கட்சி செயலாளர் என்பதெல்லாம் அவர்களுடைய கட்சி உள்விவகாரம். அதை அவர்களுக்குள் பேசி முடிப்பார்கள். இதில் பேரவைத் தலைவர் உள்ளிட்ட யாரும் தலையிட போவதில்லை.

அவர்கள் என்ன காரணத்திற்காக நீக்கியுள்ளனர், எதற்காக புதிய நபரை நியமித்துள்ளனர் என்பதையெல்லாம் படித்துப்பார்த்து சட்டப்பேரவை விதி என்ன கூறுகிறது என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துதான் முடிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சட்டமன்ற பதவிகள் தொடர்பாக எந்த கடிதம் வந்தாலும் அதனை பரிசீலிக்க கூடாது என்று பேரவைத் தலைவரிடம் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் வகித்துவந்த, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பாக பேரவைத் தலைவருக்கு இபிஎஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x