Published : 19 Jul 2022 10:43 AM
Last Updated : 19 Jul 2022 10:43 AM

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம் | முதல்வரின் அறிவுரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: " சின்னசேலம் பள்ளியில் தீக்கிரையாக்கப்பட்ட குழந்தைகளின் சான்றிதழ்கள் தொடர்பாக முதல்வரின் அறிவுரை அடிப்படையில், சான்றிதழ்கள் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும். நகல் சான்றிதழ்கள் உடனடியாக எடுத்துக்கொள்ளலாம், எனவே, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள், கவலைப்பட வேண்டாம்" என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?அங்கு இருக்கக்கூடிய மக்களின் நிலை என்ன, என்ன மாதிரியான தீர்வு காணலாம், குழந்தை இறந்த பள்ளியில் இருக்கின்ற 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளின் நிலை, அதில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறோம் என்பன குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், இன்று காலை காணொலி காட்சி வாயிலாக நானும், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கிக்கூற இருக்கிறோம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடந்த பள்ளியிலிருந்த சான்றிதழ்கள் எரிந்துபோய்விட்டன. இன்னும் புகை வாடை வீசுகிறது. அங்குள்ளவர்கள் அந்த சான்றிதழ்களை காண்பிக்கும்போது அழுதுகொண்டே காட்டினர். நீதிமன்றத்துக்கு சென்றபின் எதற்காக இந்த மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று தெரியவில்லை.

நீதிமன்றமும் கூட அதைத்தான் கூறியிருக்கிறது. இது கோபத்தால் வந்ததாக தெரியவில்லை. திட்டமிட்டே செய்திருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள நீதிமன்றம் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

வெறுமனே சான்றிதழ் மட்டுமல்ல, பிறப்புச் சான்றிதழ் உள்பட குறிப்பாக குழந்தைகளின் சான்றிதழ்கள் தொடர்பாக முதல்வர் என்ன அறிவுரை வழங்குகிறாரோ, அதனடிப்படையில், சான்றிதழ்கள் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும். நகல் சான்றிதழ்கள் உடனடியாக எடுத்துக்கொள்ளலாம், அதனால், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள், கவலைப்பட வேண்டாம்.

பள்ளியை பார்க்கும்போது, இயல்புநிலைக்கு திரும்ப சிறிதுகாலம் எடுக்கும். எனவே இந்தநேரத்தில் கற்றல் இடைவெளி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப் போகிறோம். அவரது அறிவுறுத்தலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அருகில் 5 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள், இரண்டு கல்லூரிகள் உள்ளன. இதை பயன்படுத்தலாமா, அல்லது இந்த பள்ளியிலேயே சரிசெய்து படிக்க வைக்கலாமா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x